×

18 வயதை கடந்தவர்களுக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா வேக்சின் 1.5 கோடி தடுப்பூசி கொள்முதல்: தமிழக அரசு உத்தரவு: முன்பதிவு துவங்கியது

சென்னை: இந்தியா முழுவதும் 18 வயதை கடந்தவர்களுக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று மாலை துவங்கியது. இதைத்தொடர்ந்து 1.5 கோடி தடுப்பூசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் வரை கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 1ம் தேதி (சனி) முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1ம் தேதி முதல் அதிகம் பேர் மருத்துவமனைகளுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் நேற்று வரை சுமார் 15 கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில், வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன் பதிவு செய்வது கட்டாயம். www.cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் நேற்று (28ம் தேதி) மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதேநேரம் நேரடியாக தடுப்பூசி செலுத்தும் இடங்களுக்கே சென்று முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதிக்கு பிறகு நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுவதால், மையங்களில் அதிக கூட்டம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 18 முதல் 45 வயதுடையவர்கள் ‘கோவின்’ தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட செல்லும்போது முன்பதிவு சீட்டு மற்றும் பதிவு செய்ய பயன்படுத்திய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அடையாள அட்டையை மறக்காமல் தடுப்பூசி மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த சூழ்நிலையில், தமிழகத்திற்கு முதல்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழக அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (27ம் தேதி) வரை 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Corona , 1.5 crore purchase of Corona vaccine for 18-year-olds from May 1
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...