துரைப்பாக்கம் பகுதி தனியார் பள்ளிகள் அடாவடி: கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் அனுமதி மறுப்பு

துரைப்பாக்கம்: உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, இடப்பெயர்வு என பல பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.  பொதுமுடக்கத்தினால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கல்வித்துறையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும்  மூடப்பட்டன. இதனையடுத்து அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகள் இந்த வேலைகளை சிறப்பாக செய்தாலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைமை கேள்விக்குறிதான்.

தொழில்நுட்ப வசதி இல்லாமை, குடும்பச் சூழ்நிலை, குழந்தைகளின் ஊட்டச்சத்து, வேலையிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பொருளாதார செலவு உள்ளிட்ட பிரச்னைகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், சென்னை துரைப்பாக்கம்  ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெரும்பாலானோர் கடந்த ஆண்டிற்கான  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகள்  2021 - 2022ம் ஆண்டிற்கான  ஆன்லைன் வகுப்புகளை  தொடங்கியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு எந்தெந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லையோ அவர்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பின்றி  இந்த ஆண்டிற்கான ஆன்லைன் வகுப்பில் அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது. இதனால்,அங்கு பயிலும்  மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களின் கோரிக்கையாக  உள்ளது.

Related Stories: