×

மீன்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை: உக்கடம் பெரியகுளத்தில் செத்து மிதக்கின்றன

கோவை: கோவை உக்கடம் பெரிய குளத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைபோல், உக்கடம் பெரியகுளத்தில் வாழும் மீன்களுக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இக்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது.
கொரோனா பரவலை அடுத்து பொதுமக்கள் செல்ல தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரிய குளம் ஆகாய தாமரையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை தூர்வாரும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், குளத்தின் கரையோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் நேற்று இறந்து மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். துர்நாற்றமும் வீசுகிறது. தண்ணீர் மாசு அடைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மீன்கள் இறந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக  மீனவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “வெயில் காலத்தில் இதுபோல் மீன்கள் இறப்பது வழக்கமான ஒன்றுதான். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொத்து கொத்தாக இறக்கின்றன. இதையடுத்து, மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளது. தவிர, நெகமத்தில் இருந்து சுண்ணாம்புகல் கொண்டு வந்து குளத்தில் போட முடிவு செய்துள்ளோம். இதனால், மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்” என்றனர். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இக்கட்டான காலக்கட்டத்தில், மீன்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

Tags : Periyakulam , Fish, lack of oxygen
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்