×

டெம்போ ட்ராவலர் வேன்களை ஆம்புலன்சாக மாற்றிய கேரள மனிதர்!: தன்னலமற்ற சேவைக்கு குவியும் பாராட்டு..!!

திருவனந்தபுரம்: கொச்சியில் டெம்போ ட்ராவலர் வேனை ஆம்புலன்ஸாக மாற்றிய தன்னலமற்ற மனிதரின் சேவை வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று மனிதர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், மனிதர்களிடம் குடிகொண்டுள்ள மனித நேயத்தையும் வெளிக்கொண்டு வருவதை அண்மை காலமாக அறிய முடிகிறது. அதற்கு மேலும் ஒரு சான்றாக தொழிலதிபரின் செயல் உள்ளது. கொச்சியை அடுத்த திருக்காராவை சேர்ந்த 43 வயதான நஜீம் வெள்ளக்கல் என்பவர் தனியார் நிறுவனங்களுக்கு வேன்களை வாடகைக்கு வழங்கி வந்தார். 


கொரோனா பரவல் காரணத்தால் வீட்டில் இருந்து பணி செய்ய ஐ.டி. நிறுவனங்கள் முடிவெடுத்த நிலையில், தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தன் பணியாளர் ஒருவரை பாலக்காட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்ப முடியாமல் அவர் சிரமப்பட்டுள்ளார். இந்த தாக்கத்தின் காரணமாக தனது டெம்போ ட்ராவலர் வாகனத்தை நஜீம் ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றியுள்ளார். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தேவையான உபகரணங்களுடன் மாற்றி அமைக்க 10 ஆயிரம் ரூபாய் வரை செலவானதாக தெரிவிக்கும் அவர், இதுவரை தன்னிடம் உள்ள 20 வாகனங்களில் 5ஐ ஆம்புலன்ஸாக மாற்றி இருப்பதாக கூறினார். 


தன்னிடம் உள்ள மற்ற வாகனங்களையும், ஆம்புலன்ஸாக மாற்ற முடிவு செய்துள்ளதாக நஜீம் தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழலில் தன் தொழிலுக்கான வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்றிய அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 



Tags : Kerala , Tempo van, ambulance, Kerala man
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...