மின் உற்பத்தி அதிகரிப்பால் பார்சன்ஸ்வேலி அணையில் நீர்மட்டம் குறைந்தது

ஊட்டி: மின் உற்பத்திக்காக தினமும் தண்ணீர் எடுப்பதால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்படும் முக்கிய அணையான பார்சன்ஸ்வேலி அணையில் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்தியாக அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி, பைக்காரா, பார்சன்ஸ்வேலி போன்ற முக்கிய அணைகள் உள்ளன. இவை மின் உற்பத்திக்காக பயன்படுகிறது. இதுதவிர, இந்த அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முக்கிய ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது.

இந்த அணையில் இருந்து காட்டுகுப்பை மற்றும் குந்தா நீர் மின் நிலையங்கள் இயக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கோடை காலம் என்பதால், சமவெளிப் பகுதிகளில் மின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தற்போது மின் ேதவை அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, குந்தா மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் நிலையங்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது. காட்டுக்குப்பை மற்றும் குந்தா மின் நிலையங்கள் இயக்கப்பட பயன்படும் பார்ச்ன்ஸ்வேலி அணையில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், இந்த அணையின் நீர்மட்டம் குறைந்துக் கொண்டே செல்கிறது. கோடை காலமான அடுத்த மாதம் மின் உற்பத்திகாக மேலும், தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ள நிலையில், பார்ச்னஸ் வேலி அணை நீர் மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், குடிநீர் விநியோகமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>