விம்பிள்டனில் பெடரர் வெல்ல வேண்டும்: போரிஸ் பெக்கர் விருப்பம்

லண்டன்: ‘ரோஜர் பெடரர் இப்போதும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை அவர் வெல்ல வேண்டும்’ என்று ஜெர்மனியின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் போரிஸ் பெக்கர் தெரிவித்துள்ளார்.  ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் 20 பட்டங்களை வென்று, சாதனை படைத்துள்ளார். தற்போது அவர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். இருப்பினும் முழு உடல் தகுதியுடன் இந்த ஆண்டு விம்பிள்டனில் அவர் பங்கேற்றால், அவர் வெற்றி பெறுவார் என்று 17வது வயதில் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்த ஜெர்மனியின் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பெடரர் இன்னும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். அவரது டென்னிஸ் வேறு லெவல். அவர் டென்னிசில் ஒரு புதிய திசையை உருவாக்கியுள்ளார் என்றே கூற வேண்டும். அவர் முழு உடல் தகுதியுடன் இந்த ஆண்டு விம்பிள்டனில் பங்கேற்றால் அவர்தான் பட்டம் வெல்வார். ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற, அவரது டென்னிஸ் வாழ்வு, விம்பிள்டன் பட்டத்தை வெல்வதன் மூலம் ஒரு சிறப்பான முடிவை எட்டும். இது எனது விருப்பம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், அவற்றில் விம்பிள்டனில் மட்டும் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெடரரின் ‘பேவரிட்’ என்று விம்பிள்டன் மைதானத்தை குறிப்பிட்டு, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: