பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி: ஏ.பி.டிவில்லியர்ஸ் எங்கள் சொத்து...கேப்டன் கோஹ்லி பாராட்டு

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 22வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களுரூ 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் ஆட்டம் இழக்காமல் 42 பந்தில், 3பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன் விளாசினார். கேப்டன் கோஹ்லி 12, தேவ்தத் படிக்கல் 17, ரஜத் பட்டிதர்  31 (22பந்து), மேக்ஸ்வெல் 25(20பந்து) ரன் எடுத்தனர்.

பின்னர் 172 ரன் இலக்கை துரத்திய டெல்லி அணியில் தவான் 6, ஸ்டீவன் ஸ்மித் 4, பிரித்வி ஷா 21 , மார்கஸ் ஸ்டோய்னிஸ் 22 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பன்ட்- ஹெட்மயர் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். கடைசி 2 ஓவரில் 25 ரன் தேவைப்பட்டநிலையில், 19 வது ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல் 11ரன் கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட  முகமது சிராஜிடம் பந்தை கோஹ்லி கொடுத்தார். முதல் 3 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில், 4வது பந்தில் பன்ட் 2 ரன் எடுத்தார்.

5வது பந்தில் பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில், பன்ட்டால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுக்க ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு த்ரில் வெற்றிபெற்றது.

ஹெட்மெயர் 53(25பந்து,2பவுண்டரி,4 சிக்சர்), ரிஷப் பன்ட் 58 ரன்னில் (48பந்து,6பவுண்டரி) ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 5வது வெற்றியை பெற்ற பெங்களூரு 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. டெல்லி 2வது தோல்வியை சந்தித்தது. பெங்களூருவின் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘‘ஒரு கட்டத்தில் ஆட்டம் எங்களை விட்டு சென்று விட்டதாக நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரை சிராஜ் தொடங்கிய விதம் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. அவர் சிறப்பாக முடித்தார்.  மேக்ஸி, ஏபி, ரஜத் நல்ல இன்னிங்ஸ் ஆடினர். 160-165 ரன் சவாலாக இருக்கும் என உணர்ந்தோம். பிட்ச் சற்று வேகமாக இருந்தது. சிறிய மணல் புயலால் எந்த பனியும் இல்லை. எங்கள் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. மேக்ஸி 7வது சாய்ஸ். ஒரு கேப்டனாக நான் வெவ்வேறு கட்டங்களில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடியும். எங்களுக்கு எப்போதும் பேட்டிங் ஆழம் இருந்தது, ஆனால் இப்போது எங்களுக்கு பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. டிவில்லியர்ஸ் 5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடியதில்லை, ஆனால் நீங்கள் அவரின் பேட்டிங்கை பார்த்தால் அவர் இனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை என்று நினைக்கவில்லை. அவரை வரவேற்கிறேன். அவர் எங்களுடைய சொத்து’’, என்றார்.

ஆட்டநாயகன் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில், ஒவ்வொரு விளையாட்டுக்கும் புதியதாக இருப்பது முக்கியம். நான் வீட்டிலும், ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலும் உடற்தகுதிக்கு கடுமையாக உழைத்தேன். இதனால் பேட்டிங்கின் போது என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆடுகிறேன். அனுபவம் வாய்ந்த 2 வீரர்கள் மற்றும் சில இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி உள்ளனர். நான், கோஹ்லி, மேக்ஸி நிறைய போட்டிகளில் ஆடி உள்ளோம். எங்களால் முடிந்தவரை வெற்றிக்கு உதவுகிறோம். என்றார்.

15 ரன் அதிகம் கொடுத்துவிட்டோம்

டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் கூறியதாவது: தோல்வியை ஏமாற்றமாக உணர்கிறேன். அவர்கள் கூடுதலாக 10-15 ரன் எடுத்துவிட்டார்கள் என நினைக்கிறேன், ஹெட்மயர் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார்,  இதனால் நாங்கள் வெற்றியை நெருங்கினோம். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாததால்  கடைசி ஓவரை ஸ்டோனிய்சை வீச வைத்தேன். எல்லா போட்டிகளிலிருந்தும் சாதகமாக எடுத்துக் கொள்வது நல்லது, ஒரு இளம் அணியாக நாம் ஒவ்வொரு நாளும் மேம்படுத்த விரும்புகிறோம், என்றார்.

Related Stories: