வேளாங்கண்ணி - தெற்கு பொய்கைநல்லூர் இடையே சேதமடைந்த சிமெண்ட் சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகை: கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக வேளாங்கண்ணியில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் செல்லும் சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பொய்கைநல்லூர் எனும் புகழ்பெற்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு தான் கோரக்கர்சித்தர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். பொய்கைநல்லூர் அருகே தெற்குபொய்கைநல்லூர் அமைந்துள்ளது. இப்பகுதி காய்கறிகள், பழங்கள், பயறுவகை பயிர்கள் என ஏராளமான பணப்பயிர்கள் விளையும் பகுதி ஆகும்.

தெற்குபொய்கைநல்லூரில் சோப்பரிக்காடு, கீழத்தெரு, நடுத்தெரு, பூக்காரத்தெரு என 10க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் சாலை வசதி தான் இல்லை. வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோயில் தெரு திரும்பும் இடத்தில் இருந்து தெற்குபொய்கைநல்லூர் செல்லும் வரை சிமெண்ட் சாலை சேதம் அடைந்து கடந்த 10 ஆண்டு காலத்தை கடந்து விட்டது. ஆனால் அதை சீர் செய்ய இன்னும் ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. மாவட்ட நிர்வாகம் வரை மனு கொடுத்தும் ஓய்ந்து போன அப்பகுதி பொதுமக்கள் சேதம் அடைந்த சிமெண்ட் சாலைகளை பயன்படுத்துவது தான் விதி என நினைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

சாலைகள் சேதமடைந்து இருப்பதால் அப்பகுதியில் விளையும் காய்கறிகளை அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். அதிகாலை நேரங்களில் காய்கறிகளை பறித்து கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சேதம் அடைந்த சிமெண்ட் சாலையை புதிய சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>