×

தபால் வாக்குகளை எண்ணியவுடன் முடிவை அறிவிக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சென்னை, : தபால் வாக்குகளை எண்ணியவுடன் உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வாக்கு எண்ணும் பணி தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். அதன் முடிவுகளை அறிவித்த பிறகுதான் வாக்குப் பதிவு அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகளுக்கு தரப்பட்டுள்ள விதிகள் அடங்கிய புத்தகத்தின் அடிப்படையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று தங்களுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதாக அறிகிறோம்.

நாங்கள் கொடுத்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அதேநேரத்தில் வாக்கு எண்ணும் ஒரு மேஜைக்கு 500 தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தரப்படும் என்று தேர்தல் ஆணைம் உத்தரவிட்டுள்ளது.  இது ேநர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரானது என்று அஞ்சுகிறோம்.இந்த நடைமுறை மூலம் தேர்தல் அதிகாரிகள், ஏஜெண்டுகள் ஆகியோர் நீண்ட நேரம் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும். இதனால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 எனவே, வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கடந்த 20ம் தேதி கொடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆனால், ஒவ்வொரு மேஜைக்கும் 500 வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்திருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் அதிகாரிகளால் ஒரே சீரான முறையில் நடைமுறைப்படுத்த முடியாது.
 சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தரப்படும் தலா 500 தபால் வாக்குகள் ஒரே நேரத்தில் எண்ணப்படும் என்று தெரியவந்துள்ளது. இது நேர்மையான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்யாது. சென்னையில் உள்ள 2 தொகுதிகளில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் 500 தபால் வாக்குகள் தரப்பட்டு எண்ணப்பட்டால் நீண்ட நேரம் பிடிக்கும். மின்னணு வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணுவது காலதாமதமாகிவிடும்.
 
விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அதனுடன் சேர்த்து தபால் வாக்கு முடிவுகளையும் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுவும் வாக்கு எண்ணிக்கை குறித்த எங்கள் கவலைக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.தமிழகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தபால் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு விதமான நடைமுறைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கையில் சிக்கலும் குழப்பமும் ஏற்பட்டுவிடும்.
எனவே, தேர்தல் நடத்தும் அனைத்து அதிகாரிகளும் தபால் வாக்குகளை எண்ணுவதில் ஒரே சீரான நடைமுறையை கடைபிடிக்குமாறு உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு மேஜைக்கும் தரப்படும் தபால் வாக்குகளை எண்ணிய உடன் அதன் முடிவை அறிவித்து பார்ம் 20ல் பதிவிட வேண்டும். இதனால் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electoral Commission , திமுக
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு