அதிகரிக்கும் கொரோனா பரவல்!: மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு..!!

மதுரை: கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் 1200 கைதிகள் உள்ளனர். இவர்களில் விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் உறவினர்கள் சந்திக்க முடியும். தண்டனை மற்றும் தடுப்பு காவல் சிறை வாசிகளை செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் சந்திக்கலாம். தற்போது கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் கைதிகளை வெளி நபர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி அறிவித்துள்ளார். 

அதே வேளையில் சிறை கைதிகள் தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் பேச வழிவகை செய்து தரப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மத்திய சிறையில் 65 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரோல் மற்றும் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 71 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 600க்கும் கைதிகளில் நேற்று 12 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கைதிகள், சிறை வார்டன்கள் உள்ளிட்ட 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தாக்குதலுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. சிறை கைதிகளுக்கு வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பரோல் அனுமதியும், பார்வையாளர்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>