கொரோனா அதிகரிக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. மினி லாக்டவுன் வருகிறது?

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்குதல், நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சங்களையும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டில் கடந்த 18ம் தேதி முதல் நேற்றுடன் முடிந்த கடந்த 10 நாட்களில் மட்டுமே 31 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் தொற்றினால் பாதித்து இருக்கின்றனர். உலகளவில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது. அதேபோல், இதே காலத்தில் 22 ஆயிரத்து 245 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மினி ஊரடங்கு போன்று கொண்டு வரலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. எனவே இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>