டி வில்லியர்ஸ் அதிரடி விளாசல் டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி

அகமதாபாத்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ஆர்.அஷ்வினுக்கு பதிலாக இஷாந்த் இடம் பெற்றார். ஆர்சிபி அணியில் சைனி, கிறிஸ்டியனுக்கு பதிலாக பத்திதார், டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டனர். கேப்டன் கோஹ்லி, படிக்கல் இருவரும் பெங்களூர் இன்னிங்சை தொடங்கினர். கோஹ்லி 12 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, படிக்கல் 17 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். ஆர்சிபி 4.1 ஓவரில் 30 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் பத்திதார் - மேக்ஸ்வெல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 30 ரன் சேர்த்தது. மேக்ஸ்வெல் 25 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மிஷ்ரா சுழலில் ஸ்மித் வசம் பிடிபட்டார்.

அடுத்து பத்திதாருடன் இணைந்த டி வில்லியர்ஸ் தொடக்கத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 4வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தனர். பத்திதார் 31 ரன் (22 பந்து, 2 சிக்சர்) விளாசி அக்சர் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். வாஷிங்டன் 6 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் அவரிடமே பிடிபட்டார். ஆர்சிபி அணி 18 ஓவர் முடிவில் 139 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. அடுத்து டேனியல் சாம்ஸ் உள்ளே வந்தார். டி வில்லியர்ஸ் 35 பந்தில் அரை சதம் அடித்தார். கடைசி ஓவரை அமித் மிஷ்ராவுக்கு கொடுத்தால் டி வில்லியர்ஸ் ருத்ரதாண்டவம் ஆடி விடுவாரோ என அச்சப்பட்ட ரிஷப், அந்த ஓவரை வீச ஸ்டாய்னிசை அழைத்தார். யார் போட்டால் என்ன? மரண அடி தான் என்று முடிவு செய்த டி வில்லியர்ஸ் அந்த ஓவரில் 3 இமாலய சிக்சர்களை பறக்கவிட, ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது.

டி வில்லியர்ஸ் 75 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), சாம்ஸ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் இஷாந்த், ரபாடா, ஆவேஷ், அமித், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர் ந்து 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 6 ரன், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து தோற்றது. ரிஷப் அதிகபட்சமாக 58 ரன் (48 பந்து, 6 பவுண்டரி) விளாசினார். ஹெட்மயர் 53 ரன், ஸ்டொய்னிஸ் 22 ரன் எடுத்தனர். ஆர்சிபி அணி 6 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

Related Stories: