×

மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் லோகேஸ்வர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல், தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தலைவர் தேர்வு தொடர்பாக எந்த விளம்பரமும் வெளியிடவில்லை. நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் வாதிடும்போது, பணியில் இருக்கும் நீதிபதிகளை, தலைவராகவோ, உறுப்பினராகவோ நியமிக்க மட்டுமே, தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்க கலந்தாலோசிக்க அவசியமில்லை.

தகுதியான நீதிபதிகளின் பட்டியலை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் பெறுவதால், விளம்பரங்கள் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டார்.இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி உரிய தகுதிகளை பெற்றுள்ளார். முதல்வர் தலைமையில் அமைந்த தேர்வுக் குழு இவரை நியமித்துள்ளது. எனவே, இந்த நியமனம் செல்லும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Judge ,Baskaran ,State Human Rights Commission ,ICC , Appointment of retired Judge Baskaran to head State Human Rights Commission: ICC order
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...