தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

சென்னை: கொரோனா விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்,  தேதி மாற்ற வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். தமிழகத்தில் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை. தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

இந்த சூழ்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் தேதி மாற்ற வாய்ப்பில்லை. அதேநேரம், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பரிசோதனை அல்லது கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர தமிழக சுகாதாரத்துறை ஆலோசனையின்படி வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படும்.

அதேபோன்று, தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி மே 2ம் தேதி லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் துணை ராணுவப்படை ஈடுபடுத்தப்படாது. ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளவர்கள் பணியை தொடருவார்கள். வாக்கு எண்ணிக்கை குறிப்பிட்ட நாளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணியில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை செயல்படும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற நபர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>