×

கொரோனாவின் கோரத்தாண்டவம் தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படுமா? ஓடிடி தளங்களுக்கு மாறிய மக்கள்

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்கள் சினிமா, டி.வி., நாடகம். தற்போது வெப்சீரிஸ். ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், இனி சினிமாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியாமல், திரைத்துறை வல்லுநர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், பெருவாரியான ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது கவனத்தை சினிமா தியேட்டர்களின் பக்கம் இருந்து வெப்தொடர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பக்கம் எளிதில் திருப்பிவிட்டனர். காரணம், சினிமா தியேட்டர்களின் நிலை மற்றும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தியேட்டருக்குச் சென்று ஒரு படம் பார்க்க விரும்பினால், முதலில் அதற்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்க வேண்டும். பிறகு வீட்டிலிருந்து தியேட்டருக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவு மற்றும் படம் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணம், வண்டியை பார்க்கிங் செய்வதற்கான கட்டணம் என ஒரு பெருந்தொகையை ஒதுக்கியாக வேண்டும். தியேட்டருக்குள் சென்றால், அங்குள்ள கேண்டீனில் இருப்பதையே சாப்பிட்டாக வேண்டிய நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகின்றனர்.

அதற்கும் சாதாரணமாக, 200ல் இருந்து 300 ரூபாய்க்குள் செலவழிக்க வேண்டும். இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒரு குடும்பம் ஒரு படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்துவிட்டு வருவதற்கு ஆகும் செலவு, சில ஆயிரங்கள் கூட ஆகிறது.
தாங்குமா தங்கள் பாக்கெட் என்று திணறும் நடுத்தர வர்க்கம், தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ஓடிடி தளங்களை நாடுவதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுக்க சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

பிறகு கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்களில் 50 சதவிகிதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அப்போது வெளியான படங்களின் மூலம் கிடைத்த வசூல் தொகையை வைத்துப் பார்க்கும்போது, படத் தயாரிப்பு செலவினங்களுக்கும், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கிடைத்த வருமானத்துக்கும் ஏணி வைத்துப் பார்த்தால் கூட எட்ட முடியாத அளவுக்கு இருந்ததாக, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி தயாரிப்பாளர் சொன்னார். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு 100 கோடி முதல் 300 கோடி ரூபாய் வசூல் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களில், 10 சதவிகிதம் கூட உண்மை இல்லை என்றும் அந்த தயாரிப்பாளர் வருத்தப்பட்டார்.

முன்னணி ஹீரோக்களின் திரையுலக மார்க்கெட் நிலவரத்தைப் பற்றி பில்டப் செய்வதற்கு இப்படியொரு தகவல் பரப்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார். அரசு தங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்று, சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அரசு அதுபற்றி கண்டு கொள்ள மறுக் கிறது. கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுனில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தபோது கூட, தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்காமல் சம்பளம் கொடுத்துள்ளோம். சொத்து வரி, தொழில் வரி, மின் கட்டணம் கட்டியுள்ளோம்.

ஆனால், இந்த ஆண்டும் கொரோனா லாக்டவுன் தொடர்வதால், இதுபோன்ற விஷயங்களில் அரசு தங்களுக்கு சலுகை தர வேண்டும். இல்லை என்றால், லாக்டவுன் முடிந்த பிறகும் தங்களால் தியேட்டரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று, தியேட்டர் உரிமையாளர்கள் பகிரங்கமாக சொல்லிவிட்டார்கள். இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் 300 முதல் 400 தியேட்டர்கள் வரை நிரந்தரமாக மூடப்படுவது உறுதி என்று சொல்கிறார், தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.
ஏற்கனவே பல தியேட்டர்கள் வணிக வளாகங்களாகவும், குடோன்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாற்றப்பட்டு விட்டன.

கொரோனா லாக்டவுன் நிலை நீடித்தால், தமிழ்நாடு முழுவ தும் உள்ள தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ரசிகர்களும் சரி, பொதுமக்களும் சரி, தியேட்டரில் படம் பார்க்க வேண்டிய எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டனர் என்பது, சமீபகாலமாக அவர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களுக்கு கொடுக்கும் பேராதரவை கொண்டு கணிக்க முடிகிறது. ஓடிடியில் படம் பார்க்கும்போது, கொரோனா தொற்று தங்களுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இல்லை.

தியேட்டரில் படம் பார்க்கும்போது ஏற்படுகின்ற அநியாய செலவினங்கள், வீட்டில் குடும்பத்தினருடன் அமர்ந்து, விரும்பிய நேரத்தில், விரும்பிய படங்களையும், ரசிப்பதற்கு தேர்வு செய்த காட்சிகளையும், பாடல்களையும், காமெடி நிகழ்ச்சி களையும் பார்க்க முடிவதாலும், ஓடிடி தளங்களுக்கான கட்டணங்கள் குறைவாக இருப்பதாலும், தியேட்டரில் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது என்று, ஓடிடி ரசிகர்கள் சொல்கின்றனர். நம் அன்றாட வாழ்க்கையில் அதிநவீன மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது.

திறமையுள்ள யார் வேண்டுமானாலும், தங்கள் செல்போன் மூலம் கூட திரைப் படம் உருவாக்கி, அதை ஓடிடி தளத்திலோ அல்லது யூடியூப்பிலோ வெளியிட முடியும். சினிமா படத் தயாரிப்பு மாதிரி இல்லாமல், இதற்கான செலவினங்கள் மிகவும் குறைவு. அதனால்தான் முன்னணி நடிகர், நடிகைகள் ஓடிடி தளங்களுக்கான படங்களில் நடிக்கவும், தயாரிக்கவும் முன்வருகின்றனர். இனிவரும் காலங்களில் மக்கள் பொழுதுபோக்கும் இடம் சினிமா தியேட்டராக இருக்காது என்றும், பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த ஓடிடி தளத்துக்குத்தான் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள் என்றும் உறுதியாக கூறப்படுகிறது.

* திரைக்கு வராமல் முடங்கிய படங்கள்
கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது. இதனால் திரைக்கு வராத பல புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. தற்போது லாக்டவுன் காரணமாக பல படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார், லாபம், நயன்தாரா நடித்த நெற்றிக்கண், திரிஷா நடித்த ராங்கி போன்ற படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. சத்யராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி நடித்த எம்ஜிஆர் மகன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி ஆகிய படங்கள், கடந்த 23ம் தேதி திரையிட இருந்த நிலையில், தற்போதைய லாக்டவுன் காரணமாக அப்படங்கள் ரிலீசாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆனால், நேற்று முன்தினம் முதல் தியேட்டர்கள் இயங்காததால், அப்படத்தின் வசூலில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

* இனி ஹீரோயிசம் இருக்காது
தியேட்டர்களில் தங்கள் அபிமான நடிகர், நடிகைகளின் படங்களை விசிலடித்து ஆரவாரம் செய்து பார்க்கும் கூட்டம், தற்போது ஓடிடி தளங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட அனைத்து மொழி முன்னணி ஹீரோக் களின் படங்களும் ஓடிடியில் வெளியிடப்படுவதால், இனி தியேட்டர்களில் நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடக்காது. சில ஹீரோக்களின் ‘பன்ச்’ டயலாக்குகள் எடுபடாது. பல கோடி ரூபாய்களில் சம்பளம் வாங்கும் நிலையும் மாறும். ஓடிடி தளத்துக்கான மார்க்கெட் நிர்ணயிக்கப்படும். குறிப்பாக, எந்தவொரு நடிகருக்கும் இனி ஹீரோயிசம் இருக்காது. ரசிகர்கள் நல்ல கதைகளையும், நடிகர்களின் படங்களையும் தேர்வு செய்து பார்ப்பார்கள். எல்லா மொழி படத்துக்கும் சப்-டைட்டில் இடம்பெறுவதால், எல்லா மொழி படங்களையும் பார்த்து ரசிக்கும் நிலை ஏற்படும். இனிமேல் ரீமேக் செய்வது, இன்னொரு மொழியில் டப்பிங் செய்வது போன்ற நிலையும் கைவிடப்படும். ஒவ்வொரு ரசிகரும் தங்களது ஹோம் தியேட்டரின் மூலம் புதிய சினிமாக்களை விரும்பி பார்த்து ரசிப்பார்கள்.

Tags : Corona ,Koratandavam , Will Corona's Koratandavam theaters be closed permanently? People who have switched to ODT sites
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...