திருவல்லிக்கேணி மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் 2 ரவுடிகள் சரமாரி வெட்டி படுகொலை: இரவு நேர ஊரடங்கில் தொடரும் கொலைகள்; தலைமறைவான ஆசாமிகளுக்கு வலை

சென்னை: திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் 1வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவீன் (எ) வினோத் (25). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவருக்கும் அதே பகுதியில் உள்ள பிரகாஷ் (எ) மண்டை பிரகாஷ் (28) என்பவருக்கும் இடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி என்பதில் போட்டி இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவல்லிக்கேணி வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டின் முன்பு நவீன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ரவுடி நவீனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த ஐஸ்அவுஸ் போலீசார் ரவுடி நவீனை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பிரகாஷ் (எ) மண்டை பிரகாஷ், அவரது நண்பர்களான கார்த்திக் (எ) லூசு கார்த்திக் (27), பழனி (45) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ரவுடி பிரகாஷ், கார்த்திக் ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ெபற்று வந்த ரவுடி நவீன் (எ) வினோத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைதொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த பழனியை கைது செய்தனர். சென்னையில் கடந்த லாக்டவுன் போதும், இப்போது நடைமுறையில் உள்ள இரவு ஊரடங்கின்போதும் தான் அதிகளவு கொலைகள் நடந்துள்ளது. குறிப்பாக ரவுடிகளுக்குள் மோதல் அதிகளவு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது.

மற்றொரு சம்பவம்: சென்னை ஜெ.ஜெ. நகர் பாடி புதுநகரை சேர்ந்தவர் கண்ணதாசன் (32), கார் டிரைவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில், கண்ணதாசனின் பெரியப்பா மகன் குமார் இவரது வீட்டிற்கு வந்து, மது அருந்தலாம் வா என கண்ணதாசனை அழைத்து சென்றுள்ளார். இருவரும் பாடி புதுநகர் 2வது தெரு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்குகளில் வந்த 5 பேர், கண்ணதாசனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர். தப்பியோட முயன்ற அவரை ஓடஓட விரட்டி சென்று தலை, கை, மார்பு, கால் என சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, அந்த 5 பேரும் பைக்கில் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகர் மற்றும் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கண்ணதாசனின் நண்பர் அழகுசுந்தரம் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பிரகதீஷ் கொலை செய்யப்பட்டார். பிரகதீஷ் கொலையில் கண்ணதாசன் தொடர்புடையதால், பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

* தொழிலாளி அடித்து கொலை

மேடவாக்கம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் (23) கடந்த வாரம் மாயமானார். போலீசார் விசாரணையில், மேடவாக்கம் ரங்கநாதபுரம் படேல் சாலையை சேர்ந்த டில்லிபாபு (23), கடந்த ஆண்டு சங்குராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இந்த சங்குராஜுடன் வினோத் நெருக்கமாக பழகியதால், டில்லிபாபுவின் கூட்டாளிகளான மேடவாக்கம் காந்திபுரத்தை சேர்ந்த பிரகதீஷ் (25), கோபிநாத் (22), மணிகண்டன் (23), அருண்குமார் (22), பிரபாகரன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இதனால், மது போதையில் அவரை அடித்து கொன்று, ஏரிக்கரை அருகே முட்புதரில் சடலத்தை வீசியது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி, 6 பேரையும் கைது செய்தனர்.

Related Stories:

>