×

கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் ரெம்டெசிவிர் வாங்க ஆவணங்களுடன் அதிகாலையில் குவிந்த மக்கள் கூட்டம்

* இந்தியாவிலேயே தமிழகத்தில் நேரடி சப்ளை
* கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பரபரப்பு
* இன்று கிடைக்குமா?

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவருகிறது. தினமும் 15000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மருத்துவர்கள் ‘ரெம்டெசிவிர்’ ஊசியை பயன்படுத்துக்கின்றனர். இந்த மருந்து வெளிச்சந்தையில் ரூ.15,000 க்கு மேல் விற்கப்படுகிறது. ஆதலால் தமிழக அரசு ரெம்டிசிவிர் மருந்தை தமிழக மருத்துவ சேவைக் கழகம் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் நேற்று முதல் விற்பனையை தொடங்கியது. முதல்நாளில் 185 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.1545 என நிரணயிக்க்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்த மருந்து வாங்க நேற்று அதிகாலை 3 மணிக்கே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் கொரோனா நோய் தடுப்பு மையத்தின் கவுண்டரின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். சென்னை மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் டோக்கன், ஆதார் அட்டை, டாக்டர்கள் எழுதிக் கொடுத்த சீட்டுடன் குவிந்தனர். காலை 10 மணிமுதல் ஒருவருக்கு ஒரு மருந்துக்கு ரூ1545 வீதம் 6 மருந்துகள் வரை வழங்கப்பட்டது.

தாம்பரத்தை சேர்ந்த ரவி(வயது48)கூறுகையில், ‘நான் பல மணி நேரம் வரிசையில் நின்று ரெம்டெசிவிர் மருந்தை வாங்கியுள்ளேன். இங்கு இந்த மருந்துஒன்றுக்கு ரூ.1545 கேட்கிறார்கள். இந்த மருந்தை தர வெளிமார்கெட்டில் என்னிடம் ரூ.20,000 கேட்டார்கள் என்றார். கடலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘அரசுக்கு மக்களின் கஷ்டம் தெரியவில்லை. சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் மட்டும் தான் அரசு மருத்துவமனை உள்ளதா? ஒரே இடத்தில் ஏன் மருந்தை விற்க வேண்டும். மற்ற மருத்துவமனையிலும் தனிகவுண்டர் திறந்து மருந்தை விற்பனை செய்யவேண்டியதுதானே என்றார்.

கோடம்பாக்கம் ராஜேஷ் கூறுகையில், ‘‘நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வரிசையில் காத்துக் கிடக்கிறேன். இன்னும் கவுண்டர் கிட்டகூட வரவில்லை. எனக்கு முன்னால் நிறையபேர் நிக்கிறார்கள். மருந்து கிடைக்குமா? என்று தெரியவில்லை. அரசு ரெம்டெசிவிர் மருந்தை முறைப்படுத்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கவும். வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனைகளில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ இந்நிலையில் இன்று ரெம்டெசிவிருக்கான டோக்கன் வழங்கவில்லை. இதனால் இன்று பொது மக்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள் ளது.

* பிரித்து கொடுத்தபோது பிரச்னை
சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ‘‘கொரோனா தடுப்பூசிகளை ஒவ்வொரு மையங்களுக்கு பிரித்து கொடுத்த போது, சில மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தினசரி 600 முதல் 700 பேர்  தடுப்பூசி போட வருகின்றனர். அதே நேரத்தில் வழக்கமான கொரோனா நோயாளிகளும்  வருகின்றனர் என்றார்.

* ஓரிரு நாட்களில் ரெம்டெசிவிர் கூடுதல் கவுன்டர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவர்’ மருந்து வினியோகம் செய்யும் இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பால் பிரச்னை ஏற்படுவது உன்மை தான். குஜராத்தில் இருந்து கள்ளச்சந்தை மூலமாக தனியார் மருத்துவமனைகளுக்கு ‘ரெம்டெசிவர்’ மருந்து விற்பனை செய்வதை தடுப்பதற்காக அரசே நேரடியாக தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வினியோகம் செய்யும்  முயற்சியை தொடங்கினோம். கடந்த 21ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை மத்திய அரசு 59 ஆயிரம் ‘ரெம்டெசிவர்’ மருந்துகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கூடுதலான கவுன்டர்கள் அமைக்கப்பட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஆக்சிஜன் பயன்பாட்டு கணக்கீடு தினமும் மாறுகிறது. நேற்று முன்தினம் 310 கி.லி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 882 கி.லி வரை ஆக்சிஜன் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தனியாரை சேர்த்தால், 1000 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜனை சேமிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona , Crowds gather early in the morning with documents to buy Remtecivir to prevent large-scale damage by Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...