×

அரசோடு இணைந்து செயலாற்ற உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் வணிகர்களிடம் அத்துமீறுவதை அரசு அதிகாரிகள் நிறுத்த வேண்டும்: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக, தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் வணிகர்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதிக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:  முன்கள பணியாளர்களுக்கு இணையாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், காய்கறிகள் விநியோகத்தில் சேவை புரிந்து தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு, இன்றுவரை அரசு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை.

எனவே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  மே 5ம் நாள் 38வது வணிகர் தினம் இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாட்டில், பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்துள்ளது. வணிகர்கள் மீது எந்த ஒரு சட்டத் திணிப்பும் இல்லாமல், வணிகம் சம்பந்தமாக அரசோடு இணைந்து செயலாற்றும் வகையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைத்து, அதன்படி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். வணிகர்கள் மீது வழக்குகள், அபராதங்கள், தண்டனை மற்றும் கடைகளை பூட்டுதலை அரசு அதிகாரிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்காக மாநகராட்சிக்கு உணவு வழங்கியதற்கான நிலுவைத் தொகை கோடிக்கணக்கான ரூபாய் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. அது மிகப்பெரும் வணிகச் சுமையை உணவக வணிகர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உணவு வழங்கிய அனைத்து உணவகங்களுக்கும் நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்திலும், இதே அத்துமீறல்கள் தொடர்ந்து நடக்குமானால் அந்தந்த துறைசார்ந்த அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை ஏற்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Wickramarajah , Government should set up a high-level committee to work with the government to stop encroachment on traders: Wickramarajah
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...