×

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு அளித்து உபரியை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஆக்சிஜனை முழுமையாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக 4 மாதங்களுக்கு செயல்பட அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவல் தமிழக அரசு தரப்பில் நேற்று காலை பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். அதுபோக மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்” என்றும் குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஏ.எம்.சந்திரசூட், நாகேஸ்வராவ் மற்றும் ரவீந்தர் பட் ஆகியோர் அமர்வில் நேற்று காலை 11மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தில்,‘‘வேதாந்தா நிறுவனத்தின் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 35 மெட்ரிக் டன் மட்டும் தான். ஆனால், 1,050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது முரண்பாடாக உள்ளது. இதில் ஆலையின் மூலம் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்துவிட்டு உபரியை மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் உள்ளூர் மக்களின் கருத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவும் அதனை வகைப்படுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட்,‘‘ஆக்சிஜன் உற்பத்தி குறித்து நிபுணர் குழு என்ன கருத்து தெரிவித்தது?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர்,‘‘நிபுணர் குழு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை” என தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,‘‘ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசு வசம் மட்டும் தான் ஒப்படைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் எவ்வளவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது என்ற முழுமையான தகவல்கள் எங்களிடம் தான் இருக்கும் அதன் அடிப்படையில் மத்திய அரசு மட்டும் தான் அதனை பிரித்து கொடுக்க முடியும்.

அதற்கான அதிகாரம் எங்களுக்கு மட்டும் தான் உள்ளது. அதனால் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் தான் ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் நீதிமன்றத்தால் உருவாக்கப்படும் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்” என வாதிட்டார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,‘‘ இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் வேதாந்தா நிறுவனத்திர்கு ஆதரவளிக்கும் விதமாக உள்ளது. இது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கு வகையில் உள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில்,‘‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பொழுது அதனை கண்காணிப்பதற்காக தமிழக அரசு குழு அமைப்பதாக உள்ளது. அதில் உள்ளூர் மக்களும் இடம்பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் கண்டிப்பாக குழுவில் இடம் பெறக்கூடாது. ஏற்கனவே அவர்களால் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது” என வாதிட்டார். ”அனுமதி வழங்கும் பட்சத்தில் அடுத்த 10 அல்லது 12 நாட்களுக்குள் உற்பத்தியை துவங்கி விடுவோம். அதற்கு எங்களுக்கு சுமார் 250 ஆட்கள் பணிக்காக தேவைப்படுவார்கள்.

கடந்தகால சம்பவங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பிலும் ஆதரவு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து ஆலை எதிர்ப்பாளர் தரப்பு வாதத்தில்,‘‘ஆலையை திறப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மேலும் நீதிமன்றத்தால் அமைக்கப்படும் குழுவில் உள்ளூர் மக்களும் இடம்பெற வேண்டும். அப்போது தான், ஆலைக்குள் நடக்கும் விபரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியும்\” என தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘நாடு முழுவதும் இருக்கும் கொரோனா பிரச்சனையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் உள்ளூர் மக்களின் நம்பிக்கை பெறப்படுவது அவசியம். இதில் ஒருசில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் ஏற்கிறது. மேலும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வேதாந்தா நிறுவனம் வேறு எந்தவித ஆதாயத்திற்காகவும் தன்னிச்சையாக பயன்படுத்திக்கொள்ள கூடாது.

அதேப்போன்று தாமிரம் தயாரிக்கும் ஆலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லவும் அனுமதிக்க முடியாது. அதற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் நீரி அமைப்புகளிடம் ஆலோசனை நடத்தி அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு குழு உருவாக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனையும் மத்திய அரசிடம் தான் வழங்க வேண்டும். இது தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.  தமிழக தேவைக்கு போக உபரி தான் மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற மாநில் அரசின் கோரிக்கை நிகாரிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு என முன்னுரிமை வழங்க முடியாது. ஆக்சிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகலாம். மேலும் உருவாக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கண்காணிப்பு குழுவில் இரண்டு மத்திய சுகாதாரத்துறை பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட துணை ஆட்சியர், ஆக்சிஜன் உற்பத்தி விவரம் அறிந்த அரசு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இதில் முன்னதாக மாநில அரசு தரப்பில் உருவாக்கப்பட்ட குழு தற்போது மேற்பார்வை குழுவாக மாற்றப்படுகிறது. அவர்கள் ஆக்சிஜன் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கண்கானிக்க வேண்டும். இதைத்தவிர ஆலைக்குள் பணியாளர்களை அனுப்புவதற்கு முன்பாக கண்காணிப்புக் குழுவிடம் வேதாந்தா நிறுவனம் அவர்களின் விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும். சம்பந்தம் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. குழு உறுப்பினர்கள் குறித்து விவரங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்” என தெரிவித்தனர்.
    
* பொதுமக்கள் தர்ணா
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பதுபற்றி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். ஆலையை எந்த காரணம் கொண்டும் திறக்க விடமாட்டோம். ஆலையில் உள்ள தாமிர உற்பத்தி அலகுகள் முற்றிலும் பிரித்து அழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டியில் உள்ள மைதானத்திற்கு திரண்டு வந்த மக்கள், ஆலையை திறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி. ஜெயக்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்து சென்றனர்.

* பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
ஸ்டெர்லைட் ஆலை வளாகம், குடியிருப்புகள், சிப்காட், கலெக்டர் அலுவலகம், பழைய, புதிய பஸ் நிலையம், ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆகியவற்றில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் கலவரத்தடுப்பு வாகனமான வஜ்ரா ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தூத்துக்குடியில் முகாமிட்டு, எஸ்பி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். முக்கியப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 800 போலீசார், அதிவிரைவு படையினர், ஆயுதப்படையினர் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Tamil Nadu Government ,Government ,Supreme Court , Rejection of Tamil Nadu Government's request Sterlite plant Oxygen handed over to Central Government: Supreme Court order
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...