×

முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்க வைத்து 5 லட்சம் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டுள்ள கோடியக்கரை வனத்துறை: 33 ஆண்டுகளாக அரும்பணி

வேதாரண்யம்: கோடியக்கரை வனத்துறையினர் இதுவரை 5 லட்சம் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டகளை சேகரித்து குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விட்டு சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோனி ஆமை, அலங்காமை, சிற்றாமை ஆகியவை காணப்படுகிறது. இதில் அழிந்துவரும் இனமான சிற்றமை எனப்படும் ஆலிவர் ரெட்லி ஆமை வகைகள் பாக் ஜலசந்தி பகுதியான கோடியக்கரையில் அதிகம் உள்ளன. இந்நிலையில் 1987ம் ஆண்டு முதல் கோடியக்கரை வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து  குஞ்சு பொரித்து கடலில் விடும் பணியை செய்து  வருகின்றனர். ஆலிவர் ரெட்லி ஆமைகள் 400  ஆண்டுகள் வாழக்கூடியதாகும். இந்த ஆமைகள் மீனவனின் நண்பன் என்று  அழைக்கப்படுகிறது. கடலில் உள்ள ஜல்லி மீன் மற்றும் பாசியில் உள்ள  கழிவுகளைத் தின்று கடலை சுத்தம் செய்கிறது.

இதனால் மீன் வளர்ச்சி மற்றும்  இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக அமைகிறது. இவ்வகை ஆமைகள் கடலில் படகில்  அடிபட்டும், பெரிய கப்பல்களில் அடிபட்டும் தட்பவெட்ப மாறுதல்கள் மற்றும்  மீனவர் வலையில் சிக்கியும் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இதனை  கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு உதவிகளுடன் கோடியக்கரை வனத்துறையினர்  தஞ்சை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், நாகை வன உயிரின காப்பாளர்  கலாநிதி ஆலோசனையின் பேரில் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும்  வனத்துறையினர் இந்த ஆண்டு இதுவரை 6548 முட்டைகளை சேகரித்து அதனை கோடியக்கரை  ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.  குஞ்சு பொரித்த நிலையில் இதுவரை 5181 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர். கடந்த 33 ஆண்டுகளாக சுமார் 5 லட்சம் முட்டைகளை  சேகரித்து குஞ்சு பொரிக்க வைத்து வனத்துறையினர் கடலில் விட்டுள்ளனர்.  

இப்பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து கடலில் விடும் ஆமைகள் 25  ஆண்டுகள் கழித்து பருவமெய்தி அதே இடத்திற்கு மீண்டும் முட்டையிட வருகை  தரும். அப்படி முட்டையிட கடற்கரைக்கு வரும் ஆமைகள் கடற்கரையில் குழி தோண்டி  முட்டையிடும். அதனை மனிதர்கள் எடுத்து சென்று விடுவது வழக்கம். காடுகளிலுள்ள  நரிகளும் தின்றும் விடுகின்றன. இந்த அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக  கோடியக்கரையில் ஆமை குஞ்சு பொரிப்பகம் அமைத்து வனத்துறையினர் முட்டைகளை  சேகரித்து ஆண்டுதோறும் ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து 50 முதல் 60  நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடுகின்றனர்.


Tags : Kodiakkarai Forest Department releases 5 lakh turtle hatchlings after collecting eggs and hatching them: 33 years
× RELATED 33வது ஆண்டு நினைவு நாள் ராஜீவ்காந்தி...