×

ரெம்டெசிவிர் மருந்திற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள் கூட்டம்

சென்னை: திங்கட்கிழமை முதல் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்காக ரெம்டெசிவிர் மருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் உறவுகளின் உயிரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் தான் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களில் ரெம்டெசிவிர் கிடைக்காமல் அல்லல்படும் நோயாளிகளின் சூழலை பயன்படுத்தி ரூ.1,500 மதிப்பிலான ஒரு டோஸ் ரெம்டெசிவிரை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விற்பனை செய்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ரெம்டெசிவிர் குறித்த கள நிலவரங்கள் இவ்வாறு இருக்க கொரோனா பாதித்த அனைவருக்கும் ரெம்டெசிவிர் கட்டாயமல்ல. ரெம்டெசிவிர் கொரோனா தொற்றுக்கான மருந்தும் அல்ல என ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா தொற்றின் முதல் அலை முதலே ரெம்டெசிவிர் மட்டுமே கொரோனாவை குணப்படுத்தும் என திட்டமிட்டே பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி தற்போது பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று மருந்தக இடைத்தரகர்கள் லாபம் பார்ப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளும் கொரோனா பாதுகாப்பு மையங்களும் தான் சிகிச்சை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய ரெம்டெசிவிர் இருப்பு இருக்கிறது. ஆனாலும் கொரோனா தொற்றின் தொடக்க நிலை ஆனாலும் உச்ச பாதிப்பில் ஐசியு பிரிவில் உள்ளவர்களுக்கும் கட்டாயமாக ரெம்டெசிவிர் கொடுப்பது இல்லை என்றும் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் படி சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாக மருத்துவ கல்வி இயக்குனர் கூறுகிறார்.

ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி கொண்டாலே கொரோனா சரியாகிவிடும் என்று இடைத்தரகர்களின் மாய வலையில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கும் மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் அறிவுறுத்தினால் மட்டும் ரெம்டெசிவிர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.



Tags : Lower Government Hospital ,Chennai ,Remdecivir , remdesivir
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...