மகளின் திருமணத்திற்காக சேமித்த பணத்தை ஆக்சிஜன் செறிவு இயந்திரம் வாங்க ரூ.2 லட்சம் நன்கொடை அளித்த விவசாயி: மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சி

போபால்: மத்திய பிரதேசத்தில் மகளின் திருமணத்திற்காக சேமித்த ரூ. 2 லட்சத்தை, ஆக்சிஜன் செறிவு இயந்திரம் வாங்குவதற்காக விவசாயி ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார். மத்திய பிரதேசம் நிமுச் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பாலால் குர்ஜார் என்ற விவசாயி, தனது மகளின் திருமணத்திற்காக ரூ.2 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இவர், நாடு முழுவதும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை செய்திகளை பார்த்து மன வேதனை அடைந்தார். அதனால், மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த இரண்டு லட்சம் ரூபாயை இரண்டு ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை வாங்க மாவட்ட நிர்வாகத்திடம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் மயங்க் அகர்வாலிடம், ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை சம்பாலால் குர்ஜார் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘2 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டரிடம் ரூ.2 லட்சம் காசோலை வழங்கினேன். நிமுச் மாவட்ட மருத்துவமனை மற்றும் ஜிரான் அரசு மருத்துவமனைக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தந்தையை போல் நானும் எனது மகள் அனிதாவின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ரூ. 2 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தேன். ஆனால் கொரோனா வைரசால் மக்கள் இறப்பதை பார்த்து மன வேதனை அடைந்தேன்.

எனது மகளின் திருமணத்தை ஒத்திவைத்துவிட்டு, சேமித்த பணத்தை கொடுத்துவிட்டேன். எனது முடிவை என் மகளும் ஏற்றுக் கொண்டார்’ என்றார். விவசாயி சம்பாலால் குர்ஜாரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் மயங்க் அகர்வால் கூறுகையில், ‘கொேரானா நோயாளிகளுக்கு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. விவசாயி சம்பாலால் கொடுத்த பணத்திலிருந்து 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆர்டர் செய்யப்படும்’ என்றார்.

Related Stories:

>