×

கொரோனா 2வது அலை பிரச்னைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் கையிருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி: கொரோனா 2வது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக இல்லை. இதனிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆக்சிஜன் பிரச்னை போன்றவை பற்றி உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே விரும்புகிறோம். உயர்நீதிமன்றங்கள் விசாரித்தாலும் நாங்களும் மௌனமாக இருப்பதை விரும்பவில்லை. ஆக்சிஜன் என்பது நாடு சார்ந்த பிரச்னை. அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம்.

தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என நீதிபதிகள் கூறினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுவதாக தெரிவித்தார். இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கொரனோ இரண்டாம் நிலையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை பற்றி அறிக்கை தர மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Corona 2nd Wave Issues ,Distribution ,Reserves , The Supreme Court has directed the Central Government to file a report on Corona 2nd wave problems, oxygen supply and remnant stock ..!
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு