உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர உற்சவம் நிறைவு-இன்று பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் சுவாமி உலா

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனத்துடன் வருடாந்திர வசந்த உற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் கடந்த 24ம் தேதி  தொடங்கி நடந்து வந்தது. இந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று  காலை 8 மணியளவில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சீதா, கோதண்டராம சுவாமி, லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் மூலவர் சன்னதியில்  இருந்து தங்க வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்நாபன திருமஞ்சனம் செய்து நெய்வேத்தியம் சமர்பித்தனர்.

இதில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர்,  துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியையொட்டி இன்றிரவு 7 மணிக்கு  மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.

Related Stories:

>