கொரோனா பரவலால் பக்தர்களுக்கு அனுமதியில்லை கோயில்களில் சித்ரா பவுர்ணமி விழா பொலிவிழந்தது

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலால் பக்தர்களுக்கு கோயில்களில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாக்களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சித்ரா பவுர்ணமி விழா பொலிவிழந்து காணப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரை சுற்றி 10 சிவன் கோயில்கள் உள்ளதால் திருப்பத்தூர் என பெயர் பெற்று காலப்போக்கில் திருப்பத்தூர் என பெயர் பெற்றது. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பிரம்மபுரீஸ்வரர், காளத்தீஸ்வரர், மடவாளம் ஈஸ்வரர், பெரியகரம் ஈஸ்வரர், வாணியம்பாடி அதிதீஸ்வரர் உள்ளிட்ட 10 கோயில்கள் உள்ளது.

இக்கோயில்களில் சித்திரை பவுர்ணமி நாளான்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடப்பது வழக்கம். இதில், திருப்பத்தூர் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

அதேபோல், நாட்றம்பள்ளி அருகே உள்ள பிரசித்த பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமரிசையாக நடக்கும். இதில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கேற்ப ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு படையல் சாத்தி வழிபட்டு செல்வர்.

இந்த திருவிழாவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். இந்தநிலையில், சித்ரா பவுர்ணமி நாளான நேற்று இக்கோயிலில் நடக்க இருந்த திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கோயிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது. மேலும், பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் பக்தர்களின்றி நடத்தப்பட்டு மூடப்பட்டது.  

அதேபோல், சிவாலயங்கள், வாணியம்பாடி புத்துக்கோயில், அகரம் ராஜ ராஜேஸ்வரி அம்மன், கல்லுக்குட்டை புதூர் நாக தேவதை அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சித்ரா பவுர்ணமி தின சிறப்பு பூஜைகள் பக்தர்களின்றி நடந்தது.  இதனால், கோயில்களுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பக்தர்கள் கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்த முடியாமல் கோயிலின் வெளியே கற்பூரம் மட்டும் ஏற்றி வழிபட்டு சென்றனர்.ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி என்றாலே திருப்பத்தூர் மாவட்டத்தில் களைகட்டும் திருவிழாவாக இருக்கும் போது இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணத்தினால் களை இழந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: