வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது

* தியேட்டர், சலூன், அழகு நிலையங்கள் மூடல்

* ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுபாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் சினிமா தியேட்டர்கள், சலூன், அழகு நிலையங்கள் மூடப்பட்டது.தமிழகத்தில் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களில் பரவி உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போடப்பட்டது. இந்நிலையில் மேலும் புதிய கட்டுப்பாடு நேற்று முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதாவது, அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்கள், சலூன், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் முடித்திருத்தும் தொழிலாளர்கள், சினிமா தியேட்டர் ஊழியர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் வழங்கப்பட்டு வருகிறது. டீக்கடைகளிலும் அமர்ந்து டீகுடிக்க அனுமதியில்லை. பெரிய ஜவுளிக் கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்த கூடாது. சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்களை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டது. மதுபான பார்கள் நேற்று காலை முதல் மூடப்பட்டது. வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே உள்ள சாரதி மாளிகையில் கடைகள் தனித் தனியாக இருப்பதால் அவற்றை மூட வேண்டிய அவசியமில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ-பதிவை செயல்படுத்துவதில் மெத்தனம்

தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம்,  கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு  வரும் நபர்கள் ‘eregister.tnega.org’  என்ற இணையதளத்தில் பதிவு செய்த  விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே  அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால் தமிழக-ஆந்திரா  எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்ட்டில் இ-பதிவு நடைமுறையை  பின்பற்றவில்லை. நேற்று சர்வ சாதரணமாக ஆந்திரா வாகனங்கள் சென்று வந்து  கொண்டு இருந்தது. அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் மாவட்ட நிர்வாகமோ?  மாவட்ட காவல்துறையோ தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். எனவே இ-பதிவு செயல்படுத்துவதில் அதிகாரிகளின் மெத்தன போக்கை  கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>