×

திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது ஆண்டாக சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

* போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

* கிரிவலப்பாதை வெறிச்சோடியது

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது ஆண்டாக சித்ரா பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டது. அதையொட்டி, கிரிவலப்பாதையில் தடுப்புகள் அமைத்து கண்காணித்த போலீசார் பக்தர்களை திருப்பி அனுப்பினர்.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களாக பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும், கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டார்.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த ேநரம் ேநற்று பகல் 12.16 மணியளவில் தொடங்கியது. இன்று காலை 9.59 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களையும் அந்த வழியாக அனுமதிக்கவில்லை.

கிரிவலப்பாதை வழியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியிருக்கும் கிரிவலப்பாதை, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்வது நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து கிரிவலத்துக்கு வரும் வாகனங்களை கண்காணித்து தடை செய்யவும், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Chitra Pavurnami Kiriwalam ,Thiruvannamalai , Thiruvannamalai: Chitra Pavurnami Kiriwalam has been banned in Thiruvannamalai for the 2nd consecutive year. In turn,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...