×

இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் நிராகரித்த 60 டன் வத்தலை நகராட்சி குப்பை கிடங்கில் புதைத்த தனியார் நிறுவனம்-நகராட்சிக்கு தெரியாமல் புதைத்ததாக புகார்

விருதுநகர் :  விருதுநகர் நகராட்சி குப்பை  கிடங்கில் தனியார் நிறுவனம் ஒன்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் நிராகரித்த 60 டன் வத்தலை அதிகாரிகளுக்கே தெரியாமல் குழிதோண்டி புதைத்த சம்பவம் நடந்துள்ளது.விருதுநகர் மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமாக 150 ஏக்கரிலான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிப்பது, குப்பையிலிருந்து உரங்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவி ஆண்டுகளாகியும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

நகரில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்கும் மையங்கள் 5 இடங்களில் ரூ.1.50 கோடியில் கட்டி செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் நகராட்சி குப்பை கிடங்கில் குவியல், குவியலாக குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். குப்பைகளை எரிப்பதால் மாத்தநாயக்கன்பட்டி பகுதி குடியிருப்புகளில் மக்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குப்பை கிடங்கில் தாரா லாஜிஸ்டிக்ஸ் என்னும் ஏற்றுமதி நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைத்திருந்த 60 டன் வத்தலை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் தரமற்ற வத்தல் என தூத்துக்குடி துறைமுகத்தில் நிராகரித்துள்ளனர்.
இதை தொடர்ந்து 8க்கும் அதிகமான லாரிகளில் கொண்டுவரப்பட்ட 60 டன் வத்தலை விருதுநகர் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி விட்டு, நகராட்சிக்கு 4 வரிகளில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு சென்றுள்ளனர். நகராட்சி சார்பில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு ஒரு 4 வரி கடிதத்தை அனுப்பி விட்டு மவுனம் காத்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து மத்திய உணவு பாதுகாப்பு இணை இயக்குநர் ஆய்வுக்கு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் 50 அடி நீளம் 35 அடி அகலத்தில் 10 அடி ஆழக்குழியை ஜேசிபி மூலம் தோண்டி வத்தல் மூடைகளை கொட்டி அரைகுறையாக மூடி அதன் மீது நகராட்சி வாறுகால் கழிவுகளை கொட்டி மூடிவிட்டனர். ஒரே இடத்தில் 60 டன் வத்தல் புதைக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் மாசு, வத்தல் புகை, நெடியால் சுவாச பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் குடியிருப்புவாசிகள் உறைந்து போய் உள்ளனர்.

நகராட்சியில் 4 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் இருந்தும் நகராட்சி குப்பை கிடங்கில் 60 டன் வத்தலை கொட்டியது தெரியாது, ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து குழி தோண்டியதும் தெரியாது என சாதிக்கின்றனர். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தகாத சம்பவங்கள் எது நடந்தாலும் தெரியாது என்றால் யாரிடம் முறையிடுவது.

குழிதோண்டி 60 டன் வத்தல் கொட்டி, சரியாக மூடாத காரணத்தால் வத்தல் நெடியால் குப்பை கொட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை என நகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.நகராட்சி ஆணையர் ஜெகதீஸ்வரி கூறுகையில், தாரா லாஜிஸ்டிக் ஏற்றுமதி நிறுவனத்தின் மாணிக்கராஜ் என்பவர் 60 டன் வத்தலை அழிக்க வேண்டுமென மனு அளித்தார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் தனியார் நிறுவனத்தினர் குழிதோண்டி வத்தலை கொட்டி சென்றுவிட்டனர். அதற்கு லாரிக்கு ரூ.1000 வீதம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொறுப்பற்ற பதிலை தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் கூறுகையில், கழிவு வத்தலை குப்பைகளுடன் சேர்த்து புதைப்பதால் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ெகமிக்கல் பவுடர், கழிவுகளை புதைத்தால், எரித்தால் மட்டும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

Tags : Food Safety Authority of India , Virudhunagar: A private company in Virudhunagar Municipal Garbage Depot rejected 60 tonnes of food rejected by the Food Safety and Standards Commission of India.
× RELATED தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்கும்...