×

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாப்பு-33 ஆண்டுகளாக வனத்துறையினர் சாதனை

வேதாரண்யம் : வேதாரண்யம் கடற்கரைப்பகுதியில் அழிந்துவரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் 33 ஆண்டுகளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக கடற்கரை ஆயிரத்து 60 கிலோ மீட்டர் நீளமுடையது. இது இந்திய கடற்பரப்பில் 17 சதம் ஆகும். வங்காள விரிகுடா 355 கிலோமீட்டர், பாக் ஜலசந்தி, அரபிக்கடல், மன்னார் வளைகுடா 625 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இவைகளை சோழமண்டலம், பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா, மேற்குக்கடற்கரை என நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கு பகுதிகளிலும் 442 மீன்பிடி கிராமங்களும், 362 மீன்பிடி இறங்கு தளமும் உள்ளன. இதில் 8 லட்சத்து 53 ஆயிரம் மீனவர்கள் வாழ்கின்றனர்.

இதில் நேரடியாக மீன்பிடித் தொழிலில் 2 லட்சத்து 82 ஆயிரம் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர் இந்திய பெருங்கடல் பகுதியில் பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோனி ஆமை, அலங்காமை, சிற்றாமை ஆகியவை காணப்படுகிறது இதில் அழிந்துவரும் இனமான சிற்றமை எனப்படும் ஆலிவர் ரெட்லி ஆமை வகைகள் பாக் ஜலசந்தி பகுதியான கோடியக்கரையில் அதிகம் உள்ளன. இந்நிலையில் 1987ம் ஆண்டு முதல் கோடியக்கரை வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரித்து கடலில் விடும் பணியை கடந்த 33 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் அதிகம் காணப்படும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் 400 ஆண்டுகள் வாழக்கூடியதாகும். இந்த ஆமைகள் மீனவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. கடலில் உள்ள ஜல்லி மீன் மற்றும் பாசியில் உள்ள கழிவுகளைத் தின்று கடலை சுத்தம் செய்கிறது. இதனால் மீன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக அமைகின்றது.

இவ்வகை ஆமைகள் கடலில் படகில் அடிபட்டும், பெரிய கப்பல்களில் அடிபட்டும் தட்பவெட்ப மாறுதல்கள் மற்றும் மீனவர் வலையில் சிக்கியும் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனஇதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு உதவிகளுடன் கோடியக்கரை வனத்துறையினர் தஞ்சை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், நாகை வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆலோசனையின் பேரில் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் இந்த ஆண்டு இதுவரை 6548 முட்டைகளை சேகரித்து அதனை கோடியக்கரை ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்துகுஞ்சு பொரித்தவுடன் இதுவரை 5181 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர்கடந்த 1987ம் ஆண்டு முதல் கடந்த 33 ஆண்டுகளாக சுமார் 5 லட்சம் முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்க வைத்து வனத்துறையினர் கடலில் விட்டுள்ளனர்.

இப்பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து கடலில் விடும் ஆமைகள் 25 ஆண்டுகள் கழித்து பருவமெய்தி அதே இடத்திற்கு மீண்டும் முட்டையிட வருகை தரும். அப்படி முட்டையிட கடற்கரைக்கு வரும் ஆமைகள் கடற்கரையில் குழி தோண்டி முட்டையிடும். அதனை மனிதர்கள் எடுத்து சென்று உண்பதும் காடுகளிலுள்ள நரிகள் தின்றும் விடுகின்றன.

இந்த அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக கோடியக்கரையில் ஆமை குஞ்சு பொரிப்பகம் அமைத்து வனத்துறையினர் முட்டைகளை சேகரித்து ஆண்டுதோறும் ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து 50 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடுகின்றனர். மேலும் ஆமை ஆராய்ச்சிக்காக ஒடிசா மாநிலம் ஜகீர்மாதா கடற்கரையில் ஐந்து ஆமைகளுக்கு காலர் ஐடி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஆமைகள் வாழ்விடம் செல்லுமிடம் கண்காணிக்கப்படுகிறது. அழிந்து வரும் ஆமை இனத்தை பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மீனவ நண்பன் என்று அழைக்கப்படும் ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கலாம்.

Tags : Oliver Redley Turtle ,Vedic Shore , Vedaranyam: Oliver Redley, an endangered species on the Vedaranyam coast, has been trying to save turtles for 33 years.
× RELATED கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு...