பரமக்குடி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு-கலெக்டர் ஆய்வு

பரமக்குடி :  பரமக்குடியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது 607 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் குறித்து களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தீயணைப்புத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிததுறை சார்ந்த அலுவலர்களின் ஒருங்கிணைப்போடு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று பரமக்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

பரமக்குடி பேருந்து நிலைய வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறை ஒருங்கிணைப்புடன் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு செய்து, நகரின் முக்கிய பகுதிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கிருமி நாசினி தெளித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பரமக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு சிகிச்சை வழங்கிட ஏதுவாக கூடுதல் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவோருக்கு போதிய குடிநீர், சத்தான உணவு, சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பரமக்குடியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட செந்தமிழ் நகரில் உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா, பரமக்குடி நகராட்சி கமிஷனர் செந்தில் குமரன், தாசில்தார் தமீம்ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரைச் செல்வி, ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>