×

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகரிப்பு!: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை என்பதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை விலைக்கு கொடுக்கக்கூடிய நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கப்பட்டிருந்தது. 


இந்த சூழ்நிலையில் தான் 2ம் நாளான இன்றைய தினமும் காலை 9 மணிக்கே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது வரை இந்த மருந்து வழங்கப்படாததன் காரணமாக கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ரெம்டெசிவிர் மருந்தை பொறுத்தவரையில் ஒரு டோஸ் 1545 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களில் ஒரு டோஸ் மருந்தின் விலை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து அரசானது மருந்து விநியோகத்தை தனியார் மருத்துவமனையில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கும் விநியோகம் செய்ய துவங்கியிருந்தனர். 


ஆனால் 2வது நாளான இன்று போதுமான இருப்பு இல்லாத காரணத்தினால் தற்போது வரை மருந்து விநியோகம் என்பது தொடங்கபடாமல் இருக்கிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உறவினர்கள் மருந்துகளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்டத்தினை சமாளிக்க பெருமளவில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Chennai , Chennai, Remtacivir Drug, Kilpauk Government Hospital
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!