ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மறியல்: தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படுவதை கண்டித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை முன்பு கலவர தடுப்பு வாகனம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்தவர்கள் போலீசாரின் பல கட்ட விசாரணைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி உட்பட 10 பேரை கைது செய்தனர். கலெக்டரிடம் மனு: ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என ஆலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். 1000 டன் ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார்: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இந்த முழு கொள்ளளவு, மருத்துவ துறையில் பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தயாராக உள்ளது. தேவைப்படும் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து தொடர்பான நடவடிக்கையும் துவங்கி உள்ளது. இதில் தமிழகத்தில் அத்தியாவசிய தேவை உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், நாடு முழுவதும் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு உள்ளது.

Related Stories:

>