×

மயானங்களில் இடமில்லை பூங்காக்களில் தகன மேடை: டெல்லியில் கொடூரம்

புதுடெல்லி: கொரோனா உயிரிழப்புகள் டெல்லியில் அதிகரித்து வருவதால், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கூட தகனமேடைகள் அமைக்கப்படுகின்றன. தலைநகர் டெல்லியை கொரோனா உலுக்கி வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருப்பதால் இறுதி சடங்குகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு பகல் என 24 மணி நேரமும் சடலங்கள் எரியூட்ட வேண்டும் என்று அனைத்து மயானங்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் பல சடலங்கள் குவிந்து வருவதால், அவற்றை எரிப்பதற்கு நேரம் போதாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.  ஏப்ரல் மாத தொடக்கத்தில் 30-40 என இருந்த உயிரிழப்புகள், நேற்று முன் தினமான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 650 ஆக மாறியது. இதனால், காஜிப்பூர் மயானம் உள்ளிட்ட பல்வேறு மயானங்களில் கூடுதல் தகன மேடைகள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

டெல்லியின் முக்கிய மயானமான சாரே கலே கான் அருகில் மேலும் 50 தகன மேடைகளை கட்டுவதற்கு இடம் தேடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இத்துடன் காலி மைதானங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பசுமையாக பராமரிக்கப்பட்டு வரும் அழகிய பூங்காக்களிலும் கூட தகன மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், டெல்லி மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளும் கூடுதல் தகன மேடைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தலைநகரில் நடந்து வரும் இச்சம்பவங்கள் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags : Crematorium ,Delhi , No place in cemeteries Crematorium in parks: Atrocities in Delhi
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு