உலக நாடுகள், இந்தியர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது அமெரிக்கா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா திடீரென தடை விதித்தது. இதன் காரணமாக, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எந்த மருத்துவ உதவிகளையும் செய்யாமல் அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வேடிக்கை பார்த்தனர். இதனால், அவர்களுக்கு எதிராக உலகளவில் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொதித்தனர்.  இந்தியாவுக்கு உதவி செய்யும்படி அமெரிக்க அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பல்வேறு வெளிநாடுகளும் அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டால் அதிர்ச்சி அடைந்து, அவற்றுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தன. சமூக வலைதளங்களில் அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயல், கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகளவிலான இந்த எதிர்ப்புக்கும், இந்தியர்களின் கொந்தளிப்புக்கும் அமெரிக்கா நேற்று பணிந்தது. இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மூலப் பொருட்கள், மருத்துவ  பொருட்கள், உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிசஜன் செறிவூட்டி கருவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யப்படும் என அதிபர் பிடெனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் நேற்று அறிவித்தனர். அதிபர் பைடன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா நோய் தொற்றின் தொடக்கத்தில் அதனை சமாளிக்க முடியாமல் அமெரிக்க மருத்துவமனைகள் தவித்தபோது இந்தியா உதவி செய்தது.  நாங்கள் அதனை மறக்கவில்லை. அதை போலவே, இந்தியாவிற்கு தேவைப்படும் நேரத்தில் உதவுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,’ என்று உறுதி அளித்துள்ளார்.

கைகொடுக்கும் வெளிநாடுகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை போன்றவையே உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகி இருக்கின்றன. இந்தியாவின் இந்த நிலைமை, வெளிநாடுகளுக்கு வேதனை அளித்துள்ளன. அவை தானாக முன்வந்து கைகொடுத்து, உதவிகளை அளிக்க தொடங்கி உள்ளன. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு மருத்துவ உதவிகளை அறிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய அரசுடன் அவை ஆலோசித்து வருகின்றன. வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள்  உட்பட 600 முக்கிய மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து அறிவித்துள்ளது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெல் லேயன் கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டு மொத்தமாக இந்தியாவிற்கு விரைவான உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது,” என்றார். மருத்துவ ஆக்சிஜனை கணிசமான அளவில் அளித்து உதவி செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

Related Stories:

>