×

திருவொற்றியூரில் நவீன தகனமேடை பழுதானதால் நடைபாதையில் சடலங்கள் எரிக்கப்படும் அவலம்: மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர்  நவீன தகன மேடை பழுதானதால், நேற்று ஒரே நேரத்தில் 8 உடல்கள் நடைபாதையில் எரிக்கப்பட்டன. இதனால், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பட்டினத்தார் கோயில் தெருவில் மாநகராட்சியின் நவீன எரியூட்டு தகன மேடை உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடல் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த எரியூட்டு தகன மேடை போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுது ஏற்படுவதும், பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பழுதை சரி செய்வதுமாக உள்ளனர். ஆனாலும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இந்த எரியூட்டு தகன மேடையில்  வைத்து பிணத்தை எரிக்கும்போது இயந்திர தேய்மானத்தால், சிமினி வழியாக புகை செல்லாமல், பக்கவாட்டு வழியே வெளியேறி வீடுகளில், புகை படர்வதால், சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலாம் அவதிப்படுகின்றனர்.

அதனால், இரு தினங்களாக உடல்களை எரியூட்டுவதற்கு இயந்திரங்கள் இயக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, தகன மேடையில் வைத்து, விறகில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்நிலையில், நேற்று மாலை, ஒரே நேரத்தில் 8 உடல்கள் இந்த சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால், ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். வேறு வழியின்றி, இரு தகன மேடை தவிர்த்து, நடைபாதை மற்றும் காலி இடங்களில், தனிதனியே வைத்து, ஒரே நேரத்தில் 8 உடல்களும் எரியூட்டப்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை புகை மூட்டமாக மாறியது. மேலும், நடைபாதையில் உடல்கள் எரிக்கப்பட்டதால், இறுதி சடங்கு செய்ய வந்த உறவினர்கள், தகன மேடைக்கு செல்ல பெரும் சிரமப்பட்டனர். எனவே, உடனடியாக எரியூட்டு தகனமேடை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர்  மண்டல் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvottiyur , Tragedy burns on sidewalk due to modern crematorium malfunction in Tiruvottiyur: People suffer from suffocation
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...