மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அரசு ஊழியர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி அல்லது கொரோனா சோதனை கட்டாயம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அரசு ஊழியர்கள், முகவர்கள் தடுப்பூசி அல்லது கொரோனா பரிசோதனை சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மே 2ந்தேதி (ஞாயிறு) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு நாளும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும்அரசியல் கட்சிகளின் முகவர்கள், வாக்கு எண்ணும் அரசு ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், கொரோனா சோதனை தேவையில்லை. முதல் டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்குள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்ற பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) செய்வார்கள்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள், முகவர்கள் அனைவரும் முககவசம் மற்றும் பேஸ் ஷீல்டு அணிந்திருக்க வேண்டும். கைகளில் கையுறை அணிவது நல்லது. உள்ளே வரும்போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 முதல் 28 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வோரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா கண்காணிப்புக்காக பொருத்தப்படும். காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதைதொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும். ஒரு மேஜைக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒரு தொகுதியில் 5 பூத்களின் விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையானது கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவை வெளியில் திரையில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 4 லட்சத்து 99 ஆயிரத்து 964 தபால் ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாற்று அலுவலர் ரெடி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், ‘‘தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு மாற்றாக துணை தேர்தல் நடத்தும் அலுவலர்  செயல்படுவார். போதுமான அளவு ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கைக்காக தயாராக  இருக்கிறார்கள். கொரோனா பாதுகாப்பு தொடர்பாக சுகாதார துறையின் அறிவுறுத்தல்  அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா  இரண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என நீதிமன்றம் கூறியது  தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தகவல் கிடைக்கபெற்றால், தேர்தல் ஆணையம்  தரப்பில் பதில் அளிக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>