×

கம்பீரம் மட்டுமே பெண்ணியம் இல்லை

நன்றி குங்குமம் தோழி  

திரைப்பட விமர்சகர் ராகினி டேவிட்

ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடம் வலைத்தளங்களில் அதை பற்றிய விமர்சனங்கள் பகிரப்படுவதுதான் இன்றைய டிரண்டாக உள்ளது. ராகினி டேவிட்... ஐ.டி ஊழியர். தற்போது திரைப்பட விமர்சகரும் கூட. பிறந்து வளர்ந்தது ராஜபாளையம். திருமணமாகி சென்னைக்கு வந்தவர் இங்கு ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.

எல்லா நேரத்திலும் நாம் விவாதிப்பது சினிமா பற்றித்தான். அப்படித்தான் அலுவலக உணவு இடைவேளையில் நண்பர்களுடன் சினிமா பற்றி விவாதங்கள் எழ, அதுவே காலப்போக்கில் இவரின் விருப்பமாக மாறியது. சாப்பாடு இடைவேளையில் ஆரம்பித்த கலந்துரையாடல், பிரபல எழுத்தாளர்களின் வலைப்பக்கங்களில் கமெண்டுகளாக தொடர்ந்தது. சமூகவலைத்தளங்களில் சினிமா குறித்த விவாதங்களில் ராகினி அவர்களின் கமென்ட் இல்லை என்றால் ஆச்சரியம் தான்...

வலைப்பதிவு மீதான ஆர்வம் எப்படித் தொடங்கியது?

2005 -2006ம் ஆண்டுகளில்தான் Blogs பிரபலமாக தொடங்கியது. அப்போதெல்லாம் தொடர்ந்து படிப்பேன். பல எழுத்தாளர்கள் பதிவுகளை தொடர்ந்து பின்பற்றி, அவ்வப்போது கருத்துகள் தெரிவித்து, விவாதங்களும் நடக்கும். அந்த சமயம்தான், நண்பர்கள் என்னையும் புதிதாக பிளாக் தொடங்கச்சொல்லி கேட்டார்கள். அப்படி பொழுதுப்போக்கிற்காக தொடங்கியதுதான் இது.

உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்? ஏன்?

எனக்கு கே. பாலசந்தர், வசந்த், விசு இவர்களின் படம் ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் பழைய டேஸ்ட் என்றாலும், என்னால் பெண்களை தரம் தாழ்த்தி காட்டும் படங்களை பார்க்கவே முடியாது. இந்த இயக்குநர்களின் பெரும்பாலான படங்களில் பெண்களின் பாத்திரப்படைப்பு அருமையாக இருக்கும். சாதாரண குடும்பக்கதைகளாக இருந்தாலுமே, அதில் வரும் பெண் பாத்திரங்களை மிகைப்படுத்தாமல் கதையுடன் இயல்பாக இருக்கும்படி இயக்கி இருப்பார்கள்.

நீங்கள் எழுதிய ‘Loosu Ponnu Thesis’ பற்றி...

எனது வலைப்பூவில் இந்த பதிவை எழுதி அது விவாதங்களாக தொடர்ந்தது. நம் தமிழ் படங்களில் வரும்  லூசு பெண் என்ற பாத்திரம் - குழந்தையைப் போல, எதுவுமே தெரியாமல், தாமாக சாலையைக்கூட கடக்கத் தெரியாத அப்பாவி பெண்ணாக இருப்பாள். வெளிநாடுகளில் இதை “Manic Pixie dream girl” என்று அழைப்பார்கள். அநியாயத்திற்கு பப்ளியாக, கியூட்டாக வரும் பெண், ஹீரோவை சிரிக்க வைப்பது மட்டும்தான் அவள் வேலை.

இது போன்ற பாத்திரங்கள் சாவித்திரி காலங்கள் முதலே இருந்தது. ஆனால் அவர்களுக்கு என ஒரு கதை இருக்கும். அவர்கள் ஏன் அப்படி அசட்டுத்தனமாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணம் இருக்கும்.  ஸ்ரீதேவி மூன்றாம் பிறையில் குழந்தை போன்ற கதாபாத்திரத்தில் வருவார். காரணம் அவருக்கு மறதி நோய் இருக்கும்.

ஆனால் இப்போது காலேஜ் பெண் என்றாலே அந்த பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ட்ரெண்டாகி விட்டது. ஓரிரு படங்கள் இதுபோல் வந்தால் கதைக்கு தேவை என வைத்துக்கொள்ளலாம், ஆனால் தொடர்ந்து இது போன்ற படங்களும் பாத்திரங்களும் பிரபலமடைந்து வருவதை நாம்
பார்க்கலாம்.  

சந்தோஷ் சுப்பிரமணியத்தில் வரும் ஜெனிலியா கிளாசிக் எக்ஸாம்பிள். ஆனால், ஜெனிலியா கதாபாத்திரம் அந்த கதைக்கு தேவையானதாக இருந்தது. சந்தோஷுக்கு பிடிக்கணும். சுப்பிரமணியத்திற்கு பிடிக்க கூடாது என்பதுதான் கதையின் முக்கிய அம்சம். சிடுமூஞ்சி பிரகாஷ்ராஜிற்கு பிடிக்காத பெண்ணாக, அவர் தன் மகனுக்காக தேர்வு செய்த பெண்ணின் எதிர்மறை குணங்களுடன் இருக்க வேண்டும்.

அப்போது தான் அவர் குடும்பத்திலிருந்து அந்த கதாபாத்திரம் வேறுபட்டு இருக்க முடியும். அது அந்த கதைக்கு தேவையாக இருந்தது, கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த கதையில் விவேகமான விவரமான பெண்ணாக ஆரம்பத்திலிருந்து ஜெனிலியாவை வருணித்திருந்தால், கதையில் சுவாரஸ்யமே இல்லாமல் போயிருக்கலாம்.

ஆனால் தேவையேயில்லாமல், ஹீரோ, வில்லன் மோதும் படத்தில் வரும் ஹீரோயின், சம்பந்தமேயில்லாமல் அசட்டுத்தனமாக ஏன் தொடர்ந்து வரவேண்டும். இப்படி அடுத்தடுத்த படங்களும் பெண்களை பெயருக்கு ஹீரோயினாக படத்தில் சுற்றி வருவதைத்தான் கண்டிக்கிறோம்.

பெண்களின் உலகம் மற்றும் நட்பு வட்டாரங்கள் பற்றி திரைப்படங்களில் காண்பிப்பது இல்லையே?

உண்மைதான். பல படங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான நட்பை மிக அழகாக சொல்லியிருப்பார்கள். பாதி படங்களில் நட்பு காதலாக மாறுவதும் உண்டு. ஆண்களின் நட்பினை திரைப்படங்களில் எடுத்துக்காட்டி இருப்பது போல் பெண்களின் நட்பை பற்றி சுட்டிக்காட்டி இருக்கும் படங்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். நம் திரைப்படங்கள் அனைத்துமே ஆண்களுக்காகவே உருவாக்கப்படுவதால் அதில்

பெண்களின் உலகம் வெளியே வருவதில்லை. தமிழில் வரும் 10% படங்கள் கூட ‘Bechdel Test’ஐ பாஸாவது கிடையாது.  இப்போது வெளியாகும் திரைப்படங்களில் 50 வயதை தாண்டிய ஆணுக்கும் பெண்ணுக்கும் மனநிறைவு தரும் எந்த அம்சமுமே இருப்பதில்லை. படத்தயாரிப்பாளர்களும், முதல் இரண்டு வாரங்களில் வரும் இளைஞர்களை மட்டும் கவர்ந்து வசூல் பார்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அனைத்து தரப்பினருக்குமான படங்கள் வெளிவர வேண்டும்.

‘Bechdel Test’ பற்றி விளக்க முடியுமா?  
 
திரைப்படங்களில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை நிர்ணயிக்கும் முறை. இதில் இரண்டே விதிகள்தான். ஒன்று, திரைப்படத்தில் இரண்டு பெண்கள் இருக்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்திற்கு ஒரு பெயர் இருக்கணும்.

இரண்டாவது, அந்த இரண்டு பெண்களுக்குமான உரையாடலில் ஆண்கள் பற்றிய வசனங்கள் இருக்கக் கூடாது. இந்த சோதனையை 10% தமிழ் படங்கள் கூட தாண்டாது. இது பெண்களின் பாத்திரப் படைப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கணிக்கும் முறைதான். இதை சோதனை செய்து பார்க்கலாம் என்று, சோதனையை வென்ற பத்து படங்களை இணைத்து, அதை பிரபல திரைப்பட விமர்சகர், பரத்வாஜ் ரங்கன் அவர்களின் வலைப்பதிவில் பதிவேற்றியுள்ளேன்.

வாசகர்கள் அந்த பத்து படங்களுடன், அவர்களுக்கு தெரிந்த படங்களையும் சேர்க்கட்டும். சோதனை முடிவில், நம் தமிழ் சினிமாவில் பெண்களின் முக்கியத்துவத்தை ஓரளவு கணிக்க முடியும். அப்போ ஒரு நல்ல சினிமா எப்படி இருக்கணும்? நாங்கள் யாரும் இங்கு ரூல்ஸ் போட்டு இப்படித் தான் உங்க கதையில் பெண்களை சித்தரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.

சில படங்களில் லாஜிக்கே இருக்காது. கதையை ஒரு முறை முழுவதுமாக வாசித்து திருத்தினாலே, பாதி பிழைகள் நீங்கி, கதை சுவாரஸ்யமாகும். நீங்கள் எடுக்கும் படம் நிஜத்தை பிரதிபலித்து நம்பும்படி இருக்க வேண்டும். பல படங்களை பார்க்கும் போது, கதையை எழுதியவர், பெண்கள் மீது இருக்கும் கோபத்தை தீர்க்க பழிவாங்கும் எண்ணத்தோடு எழுதியது போல இருக்கும்.

அதைப் பார்க்கும் போது, ஒரு பெண்ணிடம் கொடுத்து பிழை திருத்தம் செய்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். இது படத்தை இயக்கியவர்கள் மீதான வசை அல்ல. இது ஒரு ட்ரெண்டாக மாறி இருப்பதின் மீதான குரல். பெண்களை இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என பெண்ணியவாதிகள், இயக்குநரின் கிரியேட்டிவிட்டியை கதையை கண்ட்ரோல் செய்வதாக சிலர் சொல்கிறார்களே?பெண்களே இப்படித்தான்.... என்ற வசனங்களும், ‘அடிடா அவள, ஒதடா அவள...’ என்ற பாடல்கள் திரையில் வரும் போதும், கைத்தட்டி வரவேற்பு வருவதுபோல சில எதிர்ப்பு குரல்களும் எழத்தான் செய்யும்.

இத்தனை காலம் பெண்களுக்கு ரூல்ஸ் போட்டு பயமுறுத்தி வந்த சமூகத்திடம் நாங்கள் எதிர்ப்பு மட்டும் தான் தெரிவிக்கிறோம். ஆண்கள், பெண்கள் மீது காலம் காலமாக நிகழ்த்தி வந்த அடக்கு முறையை ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை. மேலும் நாங்கள் யாருமே, பெண்கள் எப்போதும் திரையில் மதிப்பாகத்தான் வர வேண்டும், அவர்களை போற்ற வேண்டும் என்று சொல்லவில்லை.

பெண்களும் நகைச்சுவை செய்யட்டும்... வில்லியாக நடிக்கட்டும்... சாதாரணமாக சிறு வேடங்களில் வந்து போகட்டும். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகள் வாங்கி குவித்திருக்கும் மனோரமாவிற்கு, பாதி படங்களில் அவர் கதாபாத்திரத்திற்கு பெயரே கிடையாது. அக்னி நட்சத்திரத்தில் நிரோஷாவிற்கு பெயரே கிடையாது.

அவர் சாந்தமான அமைதி கதாபாத்திரத்தில் நடித்ததால் பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் பார்க்கும் எத்தனை படங்களில் ஹீரோவிற்கு பெயர் இல்லாமல் இருக்கிறது. ஹீரோவின் அப்பா பெயர், சர்நேம் மூலமாகவாது தெரிந்துவிடும், நீ இன்னாரின் மகன் தானே என அவர் பெயர் வெளியில் தெரியும். ஆனால் அம்மா எப்போதும் அம்மா மட்டும்தான். அவள் பாத்திரத்திற்கு பெயரே இருக்காது. இது நடைமுறையாக ஒரு ட்ரெண்டாக மாறியதைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.  

பெண்ணியம் உங்கள் பார்வையில்...

பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், எவரொருவர், “ச்சே, இந்த பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. இந்த பெண்களின் நிலைமை நம்ம சமூகத்தில் கொஞ்சம் கஷ்டம்தான்” என நினைக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் பெண்ணிய சிந்தனைகள் உள்ளவர்கள்தான். இந்த பெண்களே இப்படித்தான் என குறை கூறும் ஆண்கள் கூட, பெண்கள் சமூகத்தில் மேம்பட்டிருக்கலாம் என நினைக்கும் போது, அவர்களும் பெண்ணியவாதிகள் ஆகிறார்கள்.

கம்பீரம் மட்டும்தான் பெண்ணியம் என்பது இல்லை. செய்தியில் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் கொடுமையை படித்து, அட ஏன் இப்படி என கவலைப்பட்டு அழும் மனம்கூட பெண்ணியம்தான். பெண்ணியவாதிகள் நாங்கள் கொஞ்சம் அதிகமாக இதைப்பற்றி சிந்திக்கிறோம். அதனால் கூடுதலான
கோவமும் வெளிப்படுகிறது. அவ்வளவே.

- ஸ்வேதா கண்ணன்

படங்கள் ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!