×

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டும் என சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டும் என சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் ஒரு சூழ்நிலையில் வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு துரிதப்படுத்துங்கள், அதற்கான மையங்களை உடனடியாக ஏற்படுத்துங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் செய்யும் சீரம் நிறுவனம் மற்றும் கோவாக்சின் நிறுவனம் தங்களது மருந்து உற்பத்தி விலையை கடுமையாக உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி விலை என்பது ரூ.1200 எனவும், கோவிஷீல்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போடுவதில் தொய்வு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக சாடியிருந்தனர்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் இந்த விவகாரம் சார்பாக பிரதமரிடம் வலியுறுத்தி இருந்த நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறையின் அமைச்சகத்தின் சார்பில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் உடனடியாக விலையை குறையுங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி விலையினை குறைத்தால் தான் மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்து அதிக நபர்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் உதவிகரமாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Serum India ,Bharat Biotech , corona vaccine
× RELATED கோவிஷீல்டு மட்டுமல்ல…. கோவாக்சின்...