அழகர்கோயிலில் இன்று கள்ளழகர் எதிர்சேவை: மாதிரி வைகையில் நாளை இறங்குகிறார்

அலங்காநல்லூர்: திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்று மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில். இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவானது கடந்த 23ம் தேதி தொடங்கியது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி உட்பட அனைத்து நிகழ்வுகளும் கோயில் உள் பிரகாரத்தில் ஆகம விதிப்படி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர் சேவை நடைபெற்றது.

நாளை காலை 8 மணிக்கு கள்ளழகர்-ஆண்டாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, கோயில் ஆடி வீதி நந்தவனத்தில் உள் விழாவாக நடைபெறுகிறது. இதற்காக செட் அமைத்து செயற்கை வைகை ஆறு உருவாக்கப்பட்டுள்ளது. ஆடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை வைகை ஆற்றில் நாளை காலை குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. கோயில் நிகழ்வுகளை www.tnhrce.gov.in, www.alagarkoil.org  என்ற இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம்.

Related Stories:

>