பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை: தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு.!!!!

மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 25 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் சென்னை உட்பட தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இடம் இல்லை. வேறு மருத்துவமனையை பாருங்கள் என்று அலைக் கழிக்கின்றனர். இதனால் நோயாளிகளும், உறவினர்களும் அலைந்து திரிய வேண்டி உள்ளது. சிபாரிசு உள்ளவர்கள் மட்டுமே விரைவாக மருத்துவமனைகளில் சேர முடிகிறது. அதையும் மீறி மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் வசதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, போர்க்கால அடிப்படையில் தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மனுதாரர் அரசுத் தரப்பில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை என்று வாதிட்டார். தமிழக அரசு சார்பில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து, நீதிபதி கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக அரசின் நடவடிக்கை பரவாயில்லை, பாராட்டுக்குரியது. தனியார் மருத்துவமனையில் செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கான விலையையும் நிர்ணயம் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜுன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

>