×

கொரோனா பரவலால் அதிகரிக்கும் நெருக்கடி!: கூகுள் சார்பில் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி உதவி..!!

டெல்லி: கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் நேற்று அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா போரில் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு,  கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதியுதவி  செய்ய உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.


இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,  கொரோனா தொற்று பரவலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை கண்டு மனம் கலங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவ உபகரணங்கள்  விநியோகம், மருத்துவ சேவை வழங்கி வருவோர், இக்கட்டான சூழ்நிலையில் இருப்போர் போன்றவர்களுக்கு உதவ கூகுள் சார்பாக 135 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கொரோனா நெருக்கடி பற்றி மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ட்வீட் செய்துள்ளார்.

Tags : Google , இந்தியா
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்