×

போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலைகள் முழு ஊரடங்கால் முடங்கிய தேனி மாவட்டம்

*வீடுகளை விட்டு வெளியேறாத மக்கள்

தேனி : கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் பொருட்டு, நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் வாகனங்கள், பொதுமக்கள் போக்குவரத்து இன்றி முடங்கியது.

கொரோனா 2வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி 15 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்காக கடந்த 10ம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் பாதிப்பு குறையாததால், கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. மேலும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு நடத்தவும் உத்தரவிட்டது.

இதன்படி தேனி நகரில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடங்கியது. அன்று இரவு 9 மணிக்கு நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நேற்று காலையும் முழு ஊரடங்கு தொடர்ந்ததால் அதிகாலை முதல் கடைகள் திறக்கப்படவில்லை. சிறிய டீக்கடை, பெட்டிக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

தேனி நகரில் எப்போதும் விறுவிறுப்பாக காணப்படும் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலைய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல நகரின் முக்கிய சாலைகளான மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.

அல்லிநகரம் பகுதியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொம்மையக்கவுண்டன்பட்டி, அன்னஞ்சி பிரிவு ஆகிய பகுதிகளும் வெறிச்சோடின. இதேபோல பழனிசெட்டிபட்டியிலும் கடைகள் அடைக்கப்பட்டு தேனி-கம்பம் சாலை போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.
ஊரடங்கு காரணமாக போலீசார் நகரில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்படி, தேனி நகர் நேரு சிலை, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், அரண்மனைப்புதூர் விலக்கு, அல்லிநகரம் பஸ்நிறுத்தம், எஸ்என்ஆர் ஜங்சன், அன்னஞ்சி பிரிவு ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஊரடங்கில் அரசே அத்தியாவசிய தேவையான மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் இயங்கலாம் என விலக்கு அளித்திருந்தது. எனவே, தேனியில் மருந்துக்கடைகள் திறந்திருந்தன. தேனியில் உள்ள மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டன. உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தாலும் புறநோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. அதேசமயம் உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக தேனி நகரைப் போலவே தேனி மாவட்டத்தின் பிற நகரங்கள், கிராமங்களிலும் பொதுமக்கள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இல்லாத நிலையே இருந்தது.

பெரியகுளம்: பெரியகுளம் மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் மருந்துக்கடைகள், அம்மா உணவகம் உள்ளிட்டவைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். பொது இடங்களில் சுற்றிய ஒரு சிலரை போலீசார், அவரவர் வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தினர்.

கொரோனாவை காலி பண்ணுவோம்ல...

போடியில் காமராஜர் சாலை, பெரியாண்டவர் ஹை ரோடு, கட்டபொம்மன் சிலை, வஉசி சிலை, தேவர் சிலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடின. நகராட்சி சார்பில் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. டூவீலர்களில் வந்தவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிந்தனர்.

சாலையில் விளையாட்டு

தேனி-பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள கைலாசபட்டி கிராமத்தில், பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம் சிறுவர்கள் திரண்டு வந்து விளையாடினர். போலீஸ் வாகனம் தென்பட்டால் ஓடுவதும், வாகனம் சென்றதும் விளையாடுவதுமாக இருந்தனர். முகக்கவசம் அணியாமல் சிறுவர்கள் விளையாடியதை பெற்றோர்களும் கண்டும், காணாமல் இருந்தனர். இதேபோல தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் மதுராபுரியில் வாகனம் வராததால் சாலையோரம் நீண்ட நேரம் ஒருவர் ஆடுகளை மேய விட்டிருந்தார்.

ஈ, காக்கா கூட காணோம்...

ஆண்டிபட்டி நகரில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்து. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேனி-மதுரை சாலை வெறிச்சோடியது. நகரில் வைகை அணை சாலை, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் சாலை, கடைவீதி பகுதி, சக்கம்பட்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்து. மேலும், மருந்தகம் மற்றும் பால் கடைகள் மட்டுமே திறந்திருந்தது. ஆங்காங்கே சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

எதோ நம்மளால முடிஞ்ச உதவி

கம்பத்தில் மெடிக்கல் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாலைகள், தெருக்கள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின. ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் சாலையில் சுற்றித்திரிந்த நாடோடிகள், பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் மற்றும் தன்னார்வலர் வின்னர் அலீம் ஆகியோர் சாப்பாடு மற்றும் தண்ணீர் வழங்கினர். இதை பொதுமக்கள் பாராட்டினர்.

ஏய் இந்தா... நில்லுப்பா...

முழு ஊரடங்கையொட்டி ஆண்டிபட்டியில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகள் மற்றும் செக்போஸ்டுகளும் அமைத்து சோதனை நடத்தினர். நகரில் உள்ள பாலக்கோம்பை சாலை பிரிவு, வைகை அணை சாலைப்பிரிவு பஸ் நிலையம், கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி, கணவாய் மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளும் செக்போஸ்டுகளும் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நகரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் கிராமப்புறங்களில் இருந்து ஆண்டிபட்டி நகருக்கு தேவையின்றி வந்தவர்களையும் சுற்றித்திரிந்தவர்களையும், போலீசார் பாலக்கோம்பை சாலையில் உள்ள ரயில்வே பாலம் அருகே தடுப்புகள் அமைத்து திருப்பிவிட்டனர். நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சென்று கூட்டமாக அமர்ந்தவர்களை எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். கிராம பகுதிகளில் உள்ள சாவடி பகுதிகளில் அமர்திருந்தவர்களையும் போலீசார் விரட்டி விட்டனர்.

போலீசார் கெடுபிடி இல்லை

தேவாரம்: நகரில் உள்ள தேவர் சிலை, அம்பேத்கர் சிலை பகுதியில் போலீசார் நேற்று தடுப்பு வாகன ஓட்டிகளை கண்காணித்தனர். அவசர ஊர்திகள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது; மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பொது இடங்களில் கெடுபிடிகளுடன் இல்லாமல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

உத்தமபாளையத்தில் கப்சிப்...

உத்தமபாளையம் பகுதியில் உள்ள தேவாரம், கோம்பை, அனுமந்தன்பட்டி, க.புதுபட்டி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் நேற்று முன்தினம் இரவே கடைகள் மூடப்பட்டன. உத்தமபாளையம் பைபாஸ் ரவுண்டானா சாலை. புது பஸ் நிலையம், தேனி-மதுரை நெடுஞ்சாலை, உள்பட அனைத்து சாலைகளும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

தடையை மீறியவர்கள் மீது வழக்கு

சின்னமனூரில் உள்ள திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை, பழைய பாளையம் சாலை, காந்தி சிலை, மார்க்கையன் கோட்டை ரவுண்டானா பிரிவு சாலை, சிப்பாலக்கோட்டை சாலை, சீலையம்பட்டி சாலை மற்றும் நகரில் உள்ள 27 வார்டுகளில் பொதுமக்கள், வாகன போக்குவரத்து இன்றி முடங்கியது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நகரைச் சுற்றியுள்ள 14 கிராம ஊராட்சிகள், 40 கிராமங்கள், 4 பேரூராட்சிகளும் வெறிச்சோடின. காய்கறிகள், பால், மருத்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி வந்த இரு சக்கரவாகனங்கள் வழி மறித்து வழக்கு பதிவு செய்தனர்.


Tags : Dani , தேனி : கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் பொருட்டு, நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்டம்
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...