முத்துப்பேட்டை அருகே குடிநீர் வராத குழாய்க்கு மாலையிட்டு பூஜை நடத்தி பெண்கள் போராட்டம்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த உதயமார்தாண்டபுரம் அருகே குடிநீர் வராத குழாய்க்கு பெண்கள் மாலையிட்டு பத்தி, சூடம் கொழுத்தி நூதன போரட்டத்தில் ஈடுபட்டனர்.முத்துப்பேட்டை அடுத்த உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்நிலையில் உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாச்சிகுளம் தெற்கு தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடிநீராக அம்மா பள்ளி அருகே உள்ள டேங்க்கிலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமீபகாலமாக அப்பகுதி குடிநீர் குழாய்களில் குறைவான குடிநீர் வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அறவே குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நெடுந்தூரத்திலுள்ள குளம் மற்றும் ஆறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களை எடுத்து வந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயிக்கு மாலை போட்டு பத்தி கொளுத்தி, சூடம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நூதன போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலால் இன்று(நேற்று) இப்பகுதி மக்கள் இந்த நூதன போராட்ட சடங்கை நடத்தியுள்ளனர்.கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி நகராட்சி போன்ற பகுதிகளிலும் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் இருந்தும் அதனை செலவிடப்படாமல், குடிநீர் கொடுக்காமல் மக்களை வஞ்சித்து வரும் இந்நேரத்தில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கிராம ஊராட்சிகளில் கள ஆய்வை மேற்கொண்டு அன்றாடம் மக்கள் பிரச்னைகளை குறிப்பாக குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றார்.

Related Stories:

More