சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி: நாங்கள் ஒரு அணியாக நன்றாக விளையாடுகிறோம்...ஷிகர் தவான் பேட்டி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 20வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 39 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ரன் எடுத்தார். தவான் 28, ரிஷப் பன்ட் 37 (27 பந்து), ஸ்டீவன் ஸ்மித் 34 (25பந்து) ரன் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில், வார்னர் 6, அதிரடி காட்டிய பேர்ஸ்டோவ் 38 (18பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விராட் சிங் 4, கேதர் ஜாதவ் 9 ரன்னில் வெளியேற அபிஷேக் சர்மா 5, விஜய் சங்கர் 8 ரன்னில் வெளியேற ஒருபுறம் வில்லியம்சன் தனி ஆளாக போராடினார். கடைசி 2 ஓவரில் 28 ரன் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 12 ரன் எடுத்த நிலையில், கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது. ரடாபா வீசிய அந்த ஓவரில், முதல் 5 பந்தில், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 15ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், ஜெகதீஷா சுசித் பந்தை தவறவிட லெக் பைசாக ஒரு ரன் ஓடினர். 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ஐதராபாத் தரப்பில் டேவிட் வார்னர் - கேன் வில்லியம்சன் களம் இறங்க அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து டெல்லியின் ஷிகர் தவான் -ரிஷப் பன்ட் களம் இறங்க ரஷீத்கான் வீசிய ஓவரில், 8 ரன் எடுத்து டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4வது வெற்றி மூலம் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் டெல்லி ஆக்டிங் கேப்டன் தவான் கூறியதாவது: நிச்சயமாக, ஒரு பரபரப்பான விளையாட்டு. இது சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கக்கூடாது. நாங்கள் எளிதாக வென்றிருக்க வேண்டும். நாங்கள் சில தவறுகளை செய்தோம்.

ஆனால், இது விளையாட்டின் ஒரு பகுதி. குறிப்பாக பவர் பிளேவுக்குப் பிறகு பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. கேன் வில்லியம்சன் மிகச் சிறந்த நாக் ஆடினார், அவர் ஒரு சாம்பியன் வீரர், அகமதாபாத் பிட்ச் ரன் எடுக்க இதை விட சற்று சிறப்பாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி. நாங்கள் ஒரு அணியாக நன்றாக விளையாடுகிறோம். நாங்கள் எந்த ஒரு வீரரையும் நம்பி இல்லை,என்றார். ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறுகையில், இது கடினமான ஒன்று. பவர் பிளேவுக்குப் பிறகு பந்து வீச்சாளர்கள் திரும்பி வந்த விதம் அருமை என்று நினைத்தேன். விஜய்சங்கர் எங்கள் ஸ்ட்ரைக் பந்து வீச்சாளர்களில் ஒருவர் அல்ல, ஆனால் அவர் அருமையாக பந்து வீசினார். பேர்ஸ்டோவ்-வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. டெல்லியின் பந்துவீச்சு சவாலாக அமைந்தது. மணிஷ்பாண்டேவை சேர்க்காதது தேர்வாளர்களின் முடிவு. இதற்காக விராட்சிங்கை இழிவுபடுத்த முடியாது. அவர் நல்ல வீரர், என்றார்.

Related Stories: