கொரோனா முழு ஊரடங்கு: நாகை மாவட்டம் வெறிச்சோடியது

*சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்

நாகை : கொரோனா முழு ஊரடங்கை முன்னிட்டு நாகை மாவட்டம் நேற்று வெறிச்சோடியது.கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ் அணிய தவறியவர்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களில் சானிடைசர் கிருமிநாசினி, மாஸ்க் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், ரயில்வேஸ்டேசன் ரோடு, பப்ளிக்ஆபீஸ் ரோடு, நீலா கீழ வீதி மற்றும் தெற்கு வீதி, பெரிய கடை வீதி, நாகூர் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது, அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்தகம், பெட்ரோல் பங்க் ஆகியவை திறகப்பட்டு இருந்தது.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அனாவசியமாக நாகை மாவட்டத்திற்குள் வருவோர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்லையான வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே போல் நகர பகுதிக்குள் இரண்டு சக்கர வாகனத்தில் தேவையின்றி சுற்றிதிரிவதை தடுக்க ஏழைப்பிள்ளையார் கோயில் தெரு, காடம்பாடி, புத்தூர் ரவுண்டானா ஆகிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் நாகை மாவட்டம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டது. புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பக்தர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. எப்பொழுதும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரை சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து ஆட்டோக்கள் இயக்கப்படாமல் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டது.

எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் நாகை-நாகூர் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாகையில் ஒரு சில உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் விற்பனை செய்யப்பட்டது. டீக்கடைகள் இல்லாத காரணத்தால் காலை மற்றும் மாலை நேரத்தில் உணவகங்களில் செயல்பட்ட டீக்களை வாங்கி அருந்த அதிக அளவில் பொதுமக்கள் வருகை தந்தனர். உழவர் சந்தை, பாரதி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய காய்கறி விற்பனை செய்யும் இடம், இறைச்சி விற்பனை செய்யும் இடங்களும் மூடப்பட்டு இருந்தது.

வேதாரண்யம்:நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வணிக வளாகங்கள், சிறு கடைகள் என சுமார் 5000க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.ஆட்டோ, வாடகை கார் மற்றும் வேன்களும் முழுமையாக ஓடவில்லை. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வாகனங்கள் இயங்காததால் வேதாரண்யம் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

More