×

மாவுப் பூச்சி தாக்குதலில் பருத்தியை பாதுகாப்பது எப்படி? வேளாண் துறை அறிவுறுத்தல்

பரமக்குடி : மாவு பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு நயினார்கோவில் வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 6,273 எக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நிலவிவரும் வறண்ட வானிலை அதிகளவு வளிமண்டல வெப்பத்தின் காரணமாக பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது.

மாவுப்பூச்சியில் பப்பாளி மாவுப்பூச்சி (இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்) பருத்தி மாவுப்பூச்சி, இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி, வால் மாவுப்பூச்சி மிக முக்கியமானவையாகும். மாவுப்பூச்சியை சுற்றியுள்ள வெள்ளை நிற மெழுகு படலம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், நன்மை செய்யும் பூச்சிகளிடமிருந்து அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. பஞ்சுபோல் அடர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சி கூட்டங்கள் இலைகள் இளம் தண்டுகளில் பரவிக் காணப்படும்.

இலை மற்றும் தண்டின் சாறு உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மடங்கி மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்துவிடும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேனை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல் ஊர்ந்து செல்வதை காணலாம். மேலும் கேப்னோடியம் என்ற பூஞ்சாணம் இலையின் மேற்பரப்பில் படர்வதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும்.

ஒரு ஏக்கருக்கு 40 செடிகளுக்கு மேல் இரண்டாம் நிலை தாக்குதல் அதாவது ஒரு செடியில் ஒரு கிளையானது முழுவதுமாக மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டுப்பாட்டு முறைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். மேலும், வயலில் காணப்படும் களைச்செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பப்பாளி மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசி ரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிடவேண்டும்.

பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. வேப்ப எண்ணெய் இரண்டு சதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் அல்லது மீன் எண்ணெய் மற்றும் சோப்பு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மாவுப் பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டினால் ஒரு ஏக்கருக்கு டை மீத்தோயோட் 30ஈ.சி 400 மி.லி அல்லது பிரபினோபாஸ் 50 ஈ.சி 500 மி.லி அல்லது தயோடிகார்ப் 250 கிராம் என்ற அளவிலும் தெளித்து கட்டுப்படுத்தலாம் என நயினார் கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் பானு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Department of Agriculture , Paramakudi: Department of Agriculture in Nainarko for farmers on how to protect against flour pest attack
× RELATED வேளாண் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்