தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் மரங்களை வெட்டும் கும்பல்

தர்மபுரி :  தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களை, வெட்டும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தின் வழியாக பெங்களூரு - கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மாவட்டத்தின் எல்லையாக தொப்பூரும், மாவட்டத்தின் முடிவாக காரிமங்கலம் சப்பானிப்பட்டியும் உள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடியை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனம், மரங்களை பராமரித்து வருகிறது. சாலையின் இருபுறத்தில் மரங்கள் வளர்க்கப்படுவதால், நீண்ட தூரத்தில் இருந்து வரும் பயணிகள், மரத்தடியில் கார்களை நிறுத்தி இளைப்பாறி விட்டு செல்வார்கள்.

இந்நிலையில், தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஒரங்களில் உள்ள மரங்களை, மர்மநபர்கள் சிலர் வெட்டி கடத்துகின்றனர். சமீபத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த 11 மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள், தர்மபுரி நகர போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், 4 மரங்களை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதுபோன்று குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>