×

வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

* 53 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

* விதி மீறி சுற்றியவர்களுக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை

வேலூர் : கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகத்தை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்தது.தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லா வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதன் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் மரண விகிதமும் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க நேற்று முன்தினம் இரவு 10 மணி தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை 30 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த அமலை கண்காணிக்க எஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 600 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இதற்காக 53 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பத்திரிகை, ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ சேவை, பால், மருந்துக்கடைகள் என அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. திருமண மண்டபங்களில் 100 பேருக்கு மேல் அனுமதியில்லை என்றும், இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மேல் அனுமதியில்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தேவாலயங்களில் நேற்றைய பிரார்த்தனை கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன.இந்த ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஆரணி சாலை, காட்பாடி சாலை, காட்பாடி-குடியாத்தம் சாலை, காட்பாடி-திருவலம் சாலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை என அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.

நகரில் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் அத்தியாவசிய பணிகளின்றி மேலே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் சத்துவாச்சாரி உட்பட பல இடங்களில் போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று விதிமீறி சுற்றியவர்களை மடக்கி நிறுத்தி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அறிவுரைகளை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.

முழு ஊரடங்கு அமலை கண்காணிக்க வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையிலான குழுவினர் அண்ணா சாலை, மெயின் பஜார், காந்திரோடு, கஸ்பா என பல்வேறு பகுதிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் நேதாஜி மார்க்கெட்டில் கடையை மூடி பூ மாலை தொடுத்துக் கொண்டிருந்தவரை தடுத்து எச்சரித்து கடையை மூடச் சொல்லி உத்தரவிட்டனர்.

கதவை மூடிக்கொண்ட ஓட்டல்கள்

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 95 சதவீத ஓட்டல்கள், உணவகங்கள் பார்சல் சேவை மட்டும் என்றால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்ற நிலையில் திறக்கவில்லை. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் ஒரு சிலருக்கு மட்டும் பார்சல் சேவையை வழங்கி நஷ்டத்தை காண முடியாது என்பதால் ஓட்டல், உணவக உரிமையாளர்கள் இம்முடிவுக்கு வந்ததாக ஓட்டல் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு அனுமதி

ஊரடங்கு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்ல முகூர்த்த நாள் என்பதால் ஊரடங்கில் திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு வழங்கப்பட்டிருந்தது. 100 பேர் வரை திருமணத்தில் கலந்து கொள்ளலாம். திருமணத்துக்கு வருபவர்கள் பத்திரிகையை காட்டி செல்லலாம் என்பதால் தடையின்றி திருமண மண்டபங்களுக்கு வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பைக்கில் வலம் வந்த ‘புள்ளீங்கோ’

கொரோனா ஊரடங்கு தடையை மீறி மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் நகரில் சாலைகளில் ஒரே பைக்கில் 2 பேர், 3 பேர் என இளைஞர்கள் சுற்றி சுற்றி வந்தனர். முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் வைத்திருந்த தடையை மீறி பலரும் நுழைந்து சென்றதை பல இடங்களில் காண முடிந்தது. குறிப்பாக வேலூர் அண்ணா சாலையில் அப்படி வந்த இளைஞர்களை போலீசார் மறித்து அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர். இதில் வேடிக்கை இவ்வாறு பைக்கில் சுற்றி வந்த வாலிபர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் திரிந்ததுதான்.

பசியால் தவித்த ஆதரவற்றவர்கள்

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவற்றவர்களை தேடித்தேடி உணவு வழங்கினர். ஆதரவற்றவர்கள் மட்டுமின்றி தெருவில் சுற்றி வரும் நாய்கள் உட்பட வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கும் பணி தொடர்ந்து நடந்தது.

அதுபோல் நேற்றைய ஊரடங்கின்போதும் தங்களின் பசியாற்ற தொண்டு நிறுவனங்களின் கரங்கள் நீளும் என நினைத்திருந்த ஆதரவற்றவர்கள் பலரும் பசியால் தவித்ததை பல இடங்களில் காண முடிந்தது. குறிப்பாக ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தம், சத்துவாச்சாரி பஸ் நிறுத்தம் உட்பட முக்கிய பஸ் நிறுத்தங்களில் பசியால் துவண்டிருந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.

அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் தொண்டு நிறுவனங்களும், போலீசாரும் உணவு பொட்டலங்களை வாங்கி ஆதரவற்றவர்களுக்கு வழங்கியதை காண முடிந்தது. எனவே, ஊரடங்கு போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் ஆதரவற்றவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Vellore district , Vellore: Major in the entire curfew implemented in Vellore district to control the speed of the 2nd wave of corona infection
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...