திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்-போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருநாள் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியது. தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.தமிழகத்தில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் எப்போதும் இல்லாத அளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.  நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 என்று இருந்த நிலை மாறி 150ஐ கடந்திருக்கிறது. எனவே பொதுமக்களிடம் இதுவரை இல்லாத அளவிலான அச்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பஸ்கள் ஏதுமின்றி வெறிச்சோடியது. நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

நேற்று காலை ஒரு சில இடங்களில் திறந்திருந்த சாலையோர டீ கடைகள் சிறு உணவகங்கள் ஆகியவற்றையும் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மூட செய்தனர். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திருமண விழாக்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் நடந்தது. திருமண விழாக்களுக்கு சென்றவர்களிடம் போலீசார் உரிய விசாரணை செய்து அனுமதித்தனர். திருமணம் நடைபெற்ற மண்டபங்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று கண்காணித்தனர். அரசு நிர்ணயித்த எண்ணிக்கைக்குள் நபர்கள் உள்ளனரா? என்பதை உறுதி செய்தனர்.  

மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாலையில் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் ஏஎஸ்பி கிரண் சுருதி, டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடடனர். தடையை மீறி சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். திருமணங்களுக்கு செல்வதாக தெரிவித்தவர்களிடம் அதற்கான அழைப்பிதழை சரிபாரித்து அனுமதித்தனர். இதேபோல் செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, செங்கம் உட்பட மாவட்டம் முழுவதும் ஊரடங்கால் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>