×

கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு; அதன் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை..ஐகோர்ட் கண்டனம்

சென்னை: நாளுக்கு நாள்  கொரோனா தொற்றின் 2ம் அலை உச்சத்தை எட்டி வரும் நிலையில், உயிர் பலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை என்பது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சூழ்நிலையில், கரூர் தொகுதியில் குறிப்பாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில், கொரோனா தடுப்பு விதி முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் உரிய ஏற்பாடு செய்ய உத்தரவிட கோரியும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாகவும், கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும். ஆகவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் தேர்தல் ஆணையம் சார்பில் 2 அறைகள் மட்டும் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விரிவான பதிலளிப்பதாகவும் தெரிவித்தனர். 


இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி,கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் முழு பொறுப்பு என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். பலமுறை தாங்கள் தேர்தல் தொடர்பான அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பித்தும் தேர்தல் ஆணையம் எதையும் கடைபிடிக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். 


மேலும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கிருமி நாசினி வழங்குவதுடன் முகக்கவசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர், தேர்தல் ஆணையமும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு என்பது கரூருக்கு மட்டும் பொருந்துவது அல்ல, அனைத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் பொருந்தும் என குறிப்பிட்டு, என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்தான புளு பிரிண்ட் என்று சொல்லக்கூடிய முழு விவரங்களை வருகின்ற 30ம் தேதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். 



Tags : Electoral Commission , Corona, Election Commission, Murder, iCourt
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...